Tuesday, September 08 2026 | 06:58:29 AM
Breaking News

தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

Connect us on:

தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிரதமர், சிறந்த மாணவ-மாணவியர்களுக்கான விருதுகளை வழங்கினார். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளதாகவும்  அவர்களையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். நமது இளைய இந்தியா இணையதளம் மூலம் மெய்நிகர் முறையில் நாடு முழுவதிலும் இருந்து இணைந்துள்ள இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய மாணவர் படையினரிடையே உரையாற்றிய பிரதமர் “குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மகத்தான  சாதனை” என்று கூறினார். இந்தியா ஒரு குடியரசு நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினம் சிறப்பு வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தின் ஒரு அங்கமாக இருந்ததற்காக தேசிய மாணவர் படை வீரர்கள் பெருமை கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். விருதுகளை வென்ற தேசிய மாணவர் படை வீரர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தேசிய மாணவர் படையின் பல்வேறு பிரச்சாரங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இதுபோன்ற பிரச்சாரங்கள் இந்தியாவின் பாரம்பரியத்தை இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைக்கின்றன என்று கூறினார். பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவர் படையினருக்கும் அவர் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த அதே சமயத்திலேயே தேசிய மாணவர் படை நிறுவப்பட்டது என்று திரு மோடி குறிப்பிட்டார். தேசிய மாணவர் படையின் பயணம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். குடியரசின் 75 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலமைப்பானது ஜனநாயகத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது என்றும், குடிமைப்பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது என்றும் திரு மோடி கூறினார். அதேபோல், தேசிய மாணவர் படை இந்திய இளைஞர்களுக்கு நாட்டைக் கட்டமைப்பதில் உத்வேகம் அளித்து, ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில் தேசிய மாணவர் படையின் நோக்கம் மற்றும் பொறுப்புகளை விரிவுபடுத்த மத்திய அரசு பணியாற்றி வருவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார்.  எல்லைப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கும்தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், 170-க்கும் மேற்பட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள கோட்டங்களுக்கும், 100 கடலோர பகுதிகளுக்கும் தற்போது தேசிய மாணவர் படை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாவட்டங்களில் உள்ள இளம் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள முப்படைகளையும் திரு மோடி பாராட்டினார். இந்த முயற்சியால் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் எடுத்துரைத்தார். தேசிய மாணவர் படையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியதாக  குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில்  சுமார் 14 லட்சம் தேசிய மாணவர் படை வீரர்கள்  இருந்தனர் என்றும், இன்று இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது என்றும் கூறினார். பேரிடர் மேலாண்மையில் தேசிய மாணவர் படையின் மாணவர்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், விளையாட்டு உலகில் சிறந்து விளங்குவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.  உலகிலேயே சீருடை அணிந்த மிகப்பெரிய இளையோர் அமைப்பாக தேசிய மாணவர் படை திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டில் நாடு மற்றும் உலகின் வளர்ச்சியை இந்திய இளைஞர்கள் தீர்மானிப்பார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். “இந்திய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன், உலகளாவிய நன்மைக்கான சக்தியாகவும் உள்ளனர்” என்று அவர்  கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்திய இளைஞர்கள் 1.5 லட்சம் புத்தொழில் நிறுவனங்களையும், 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டிய பிரதமர், 200-க்கும் மேற்பட்ட பெரிய உலகளாவிய நிறுவனங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்படுவதாகவும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல லட்சம் கோடி ரூபாய் அளவில் பங்களிப்பு செய்வதாகவும், லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதாகவும் குறிப்பிட்டார். இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உலகளாவிய முன்னேற்றத்தை விரைவுபடுத்தி வருவதாகப் பிரதமர் மோடி கூறினார். எந்தவொரு துறையிலும், இந்திய இளைஞர்களின் திறமை, வலிமை இல்லாமல் உலகின் எதிர்காலத்தைக் கற்பனை செய்வது கடினம் என்று கூறிய அவர், அதனால்தான் அவர்களை ‘உலகளாவிய நன்மைக்கான சக்தி’ என்று குறிப்பிடுவதாகத் தெரிவித்தார்.

தேவையற்ற தடைகளை கடக்கும்போது  தனிநபர் அல்லது நாட்டின் வலிமை அதிகரிக்கிறது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இளைஞர்கள் எதிர்கொண்ட பல்வேறு தடைகள் அகற்றப்பட்டு, இளைஞர்களின் திறன்களும் தேசத்தின் திறன்களும் மேம்பட்டிருப்பது குறித்து திருப்தி தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் இளைஞர்களில் பலர் சுமார் 10-12 வயதுடையவர்கள் என்றும், அப்போதைய நிலைமைகள் குறித்து அவர்களின் குடும்பத்தினரிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்பு, சேர்க்கை, தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்புகளுக்கு ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியால் ஆவணங்கள் சான்றளிக்கப்பட வேண்டியிருந்த நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது சில சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறினார். இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு கண்டுள்ளதாகவும், ஆவணங்களுக்கு சுய சான்றொப்பமிட தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்வி உதவித் தொகைக்கான நிதியை வழங்குவது, அதற்காக  விண்ணப்பிப்பது, கல்வி உதவித் தொகை பெறுவது போன்றவற்றில் உள்ள சிரமங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார். பாடத் தேர்வு தொடர்பான மற்றொரு முக்கிய பிரச்சனையைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, முன்பெல்லாம் வாரியத் தேர்வுகளுக்குப் பிறகு ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்தால், அதை மாற்றுவது கடினம் என்று கூறினார். எனினும் தற்போது புதிய தேசியக் கல்விக் கொள்கை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடங்களை மாற்றிக் கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது என்றார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு, கடன் வழங்கும் வங்கிகள், அதற்கு தேவையான உத்தரவாதங்களை கோரும் நிலை இருந்ததால் இளைஞர்கள் வங்கிக் கடன்களை பெறுவதில் கடினமான சூழல் நிலவியதாக அவர் கூறினார்.  2014-ல் தாம் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போது, நாட்டின் இளைஞர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தாம் உறுதியளித்ததை எடுத்துரைத்தார். வங்கி உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கும் முத்ரா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் தொடக்க காலத்தில் ரூ. 10 லட்சம் வரை பிணை இல்லாமல் கடன்கள் வழங்கப்பட்டன என்றும், 3-வது முறையாக தாம் பிரதமராக பொறுபேற்றுக் கொண்டபின், இதற்கான உச்சவரம்பு ரூ .20 லட்சமாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களின் தொழில்களைத் தொடங்க உதவியுள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தேர்தல் நடைமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு மோடி, இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டதை சுட்டிக்காட்டினார். பல இளைஞர்கள் முதல் முறை வாக்காளர்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிகபட்ச வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிப்பதே வாக்காளர் தினத்தின் நோக்கம் என்று அவர் எடுத்துரைத்தார். உலகின் மிகப்பெரிய தேர்தல்களை நடத்தும் அதே வேளையில், ஒரு சில மாத இடைவெளியில் அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவது சவாலாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். தொடக்கத்தில், மக்களவை, சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய சூழலில் அந்த முறை மாறியுள்ளது என்றும் அது நாட்டிற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். அடிக்கடி தேர்தல்கள் நடத்துவதற்கு வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை  எடுத்துரைத்த பிரதமர், ஆசிரியர்களின் கடமைகள், படிப்பு, தேர்வுக்காக தயாராவது போன்றவை பாதிப்புக்குள்ளாவதை திரு மோடி சுட்டிக் காட்டினார். மீண்டும் மீண்டும் தேர்தல்கள் நடத்துவது நிர்வாக சிக்கல்களுக்கு வழி வகுக்கின்றன என்றும், எனவே நாடு தற்போது “ஒரு தேசம், ஒரு தேர்தல்” என்ற கருத்து குறித்து விவாதித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்திய இளைஞர்கள் இந்த விவாதத்தில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஏனெனில் இது அவர்களின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளது என்று அவர் கூறினார். அமெரிக்கா போன்ற நாடுகளில், புதிய அரசு அமைப்பதற்கான தேதி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன  என்றும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், மாணவர் பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு மாதமும் தேர்தல்கள் நடத்துவதால் படிப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து சிந்திக்குமாறும், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற விவாதத்தில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

21-ம் நூற்றாண்டில் வேகமாக மாறி வரும் உலகிற்கு ஏற்றவகையில், அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்ட திரு மோடி, இந்த மாற்றத்தில் இளைஞர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கலை, ஆராய்ச்சி அல்லது புதுமைப் படைப்பு என ஒவ்வொரு துறையிலும், இளைஞர்கள் தங்களது புதுமையான சிந்தனைகள் மற்றும் படைப்பாற்றல் மூலம் புதிய சக்தியை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார். மற்றொரு முக்கியமான துறையாக அரசியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், புதிய ஆலோசனைகள் மற்றும் புதுமையான யோசனைகளுடன் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவித்தார். இது காலத்தின் தேவை என்று கூறினார். ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலில் இணைய வேண்டும் என்று செங்கோட்டையில் இருந்து தான் விடுத்த அழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். “வளர்ச்சியடைந்த இந்தியா: இளம் தலைவர்கள் பேச்சுவார்த்தையின்” போது தான் கண்ட இளைஞர்களின் வலிமையை பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் விலைமதிப்பற்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது, அனைத்து தொழில்துறையினரும் நாட்டின் சுதந்திரம் என்ற ஒற்றை இலக்கை மட்டுமே கொண்டிருந்தனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். அதேபோல், இந்த அமிர்த காலத்தில், நமது ஒரே நோக்கம் வளர்ச்சியடைந்த இந்தியாவாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  ஒவ்வொரு முடிவும், நடவடிக்கையும் இந்த இலக்கை மையமாக வைத்து அளவிடப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குதல், அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது, நமது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வது, இந்தியாவின் ஒற்றுமைக்காக உழைப்பது, நமது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவது ஆகிய ஐந்து உறுதிமொழிகளை நினைவு கூர்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்த ஐந்து உறுதிமொழிகளும் ஒவ்வொரு இந்தியருக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் தாம் பார்வையிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளைப் பாராட்டிய திரு மோடி, இது நாட்டின் குறிப்பிடத்தக்க வலிமையான “ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்” என்ற உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நாட்டின் ஒற்றுமையின் அடையாளமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதை “ஒற்றுமையின் கும்பமேளா” என்று அழைத்தார். இந்த ஒற்றுமை நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொருவரும் தமது கடமைகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பிரம்மாண்டமான மற்றும் தெய்வீகமான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளம் கடமைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். நாட்டின் தேசிய மாணவர் படை வீரர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக தாம் எழுதிய சில வரிகளை நினைவு கூர்ந்ததுடன், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டு தனது உரையைப் பிரதமர் நிறைவு செய்தார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் படைத்தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், பாதுகாப்புச் செயலர் திரு. ராஜேஷ்குமார் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னணி

இந்த ஆண்டு குடியரசு தின முகாமில் 917 மாணவிகள் உட்பட மொத்தம் 2361 தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் மாணவர்கள் பங்கேற்பது, புதுதில்லியில் ஒரு மாத காலம் நடைபெறும் தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம் 2025 வெற்றிகரமாக நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு தேசிய மாணவர் படையின் கருப்பொருள் ‘இளையோர் சக்தி, வளர்ச்சியடைந்த பாரதம்’ என்பதாகும்.

நாட்டைக் கட்டமைப்பதில் தேசிய மாணவர் படையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சியும் இடம்பெற்றது. 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த 144 இளம் மாணவர் படையினர் இதில் பங்கேற்றது இந்த ஆண்டு பேரணிக்கு உற்சாகத்தை அளித்தது.

நாடு முழுவதிலுமிருந்து நமது இளையோர் பாரதம், கல்வி அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக தேசிய மாணவர் படை பேரணியில் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …