Saturday, January 31 2026 | 05:59:15 AM
Breaking News

இந்தியாவின் அடுத்த தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு ஊக்கம் அளிக்கும் அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தி

Connect us on:

7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆர்இபிஎம் எனப்படும் அரிய புவி நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த ஆர்இபிஎம் உற்பத்தி திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

உள்நாட்டில் இதன் ஒருங்கிணைந்த உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், மின்னணுவியல் சாதனங்கள், விண்வெளிப் பயன்பாடுகள், பாதுகாப்புத் துறை சாதனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான இந்த வகை காந்தங்களின் உற்பத்தியில் தற்சார்பு அதிகரிக்கும். அரசின் இந்த நடவடிக்கை உலகளாவிய ஆர்இபிஎம் சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்தும்.

அரிய புவி நிரந்தர காந்தம் (ஆர்இபிஎம்) என்பது வலிமையான காந்த வகைகளில் ஒன்றாகும். அவை சிறிய சாதனங்களில், ஆனால் உயர் செயல்திறன் கொண்ட காந்த சக்திகள் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன . அவற்றின் உயர் காந்த வலிமையும் நிலைத்தன்மையும் பெரிய பயன்களை கொடுக்கின்றன.

இந்தியாவில் கணிசமான அளவு அரிய புவி தாதுக்கள் உள்ளன. குறிப்பாக பல கடலோர பகுதிகளிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் உள்ள மோனசைட் படிவுகளில் சுமார் 13.15 மில்லியன் டன் மோனசைட் உள்ளது. இதில் 7.23 மில்லியன் டன் அரிய புவி ஆக்சைடுகள் உள்ளன. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல், டெரி/சிவப்பு மணல் உள்நாட்டு வண்டல் மண் ஆகியவற்றில் இந்த ஆக்சைடுகள் காணப்படுகின்றன. அரிய புவி காந்த தொழில் துறைக்கு இந்த ஆக்சைடுகள் முதன்மை மூலப்பொருளாக செயல்படுகின்றன.

இந்தியா வலுவான அரிய புவி வள தளத்தைக் கொண்டிருந்தாலும் , நிரந்தர காந்தங்களின் உள்நாட்டு உற்பத்தி இதுவரை அதிக அளவில் இல்லை.   தற்போதைய தேவைகளில் பெரும் பகுதியை இறக்குமதிகளே பூர்த்தி செய்கின்றன. 2022–23 முதல் 2024–25 வரையிலான காலகட்டத்தில் இந்தியா தனது நிரந்தர காந்தத்தில் பெருமளவை  இறக்குமதியில் சீனாவில் இருந்து பெற்றதாக வர்த்தகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இறக்குமதி சார்பு அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் ஆர்இபிஎம் தேவை 2030-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிகரித்து வரும் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய, ஒருங்கிணைந்த முறையில் ஆர்இபிஎம் உற்பத்தி திறனை அதிகரிப்பது அவசியம்.

அதற்கேற்ப அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த திட்டத்தில் ஆக்சைடு மூலப்பொருட்களிலிருந்து இறுதி தயாரிப்பு வரை, ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உள்நாட்டு உற்பத்தி திறனை உருவாக்கி, உயர் செயல்திறன் கொண்ட  பொருட்களுக்குத் தேவையான முழுமையான ஒருங்கிணைந்த காந்த உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில், உள்நாட்டு ஆர்இபிஎம் உற்பத்தித் திறனின் வளர்ச்சி, உள்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், மேம்பட்ட பொருட்களுக்கான உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தனது நிலையை வலுப்படுத்த இந்தியாவுக்கு ஒரு சரியான வாய்ப்பை வழங்குகிறது.

அரிய புவி நிரந்தர காந்தங்கள் (ஆர்இபிஎம்) உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம், போட்டித்தன்மையை மேம்படுத்தவும், தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்க்கவும், நீண்டகால வளர்ச்சியை நோக்கமாக கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது .  இது இந்தியாவின் பசுமை எரிசக்தி இலக்குகளுக்கும் முக்கிய பங்களிக்கும். அரசின் இந்த முயற்சி வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில்துறை திறனை மேம்படுத்தவும் உதவும் .

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …