ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் எல்லையைத் தாண்டுவதோ அல்லது பிராந்தியத்தைக் கைப்பற்றுவதோ அல்ல என்றும், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்த பயங்கரவாதிகளின் புகலிடங்களை அகற்றுவதும், எல்லை தாண்டிய தாக்குதல்களில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்த அப்பாவி குடும்பங்களுக்கு நீதி வழங்குவதும் அதன் நோக்கமாகும் என்று 2025 ஜூலை 28 அன்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தின் வடிவத்தில் மறைமுகப் போரை நடத்தியதற்காக பாகிஸ்தானைத் தண்டிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் ஒட்டுமொத்த அரசியல்-ராணுவ நோக்கமாகும் என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா தனது ராணுவத் திறனை மட்டுமல்ல, அதன் நாட்டின் உறுதிப்பாடு, ஒழுக்கம் மற்றும் அரசியல் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தியது என்று அவர் தெரிவித்தார். எந்தவொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் புது தில்லி ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பதிலடியை கொடுக்கும் என்பதை வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் அளிப்பவர்களும் ஆதரவளிப்பவர்களும் தப்ப முடியாது என்று அவர் கூறினார். எந்த வகையான அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கும், பிற அழுத்தங்களுக்கும் இந்தியா அடிபணியாது என்று அவர் தெரிவித்தார்.
2025 ஏப்ரல் 22 அன்று நேபாள குடிமகன் உட்பட 25 அப்பாவி மக்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், இந்தியாவின் சகிப்புத்தன்மையின் வரம்புகளை சோதித்த மனிதாபிமானமற்ற தன்மைக்கு மிக மோசமான உதாரணம் என்று திரு ராஜ்நாத் சிங் விளக்கினார் என்று அவர் கூறினார். தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக, பிரதமர் திரு மோடி ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார் என்று குறிப்பிட்ட அவர், மேலும் ஆயுதப்படைகளுக்கு பிராந்திய பாதுகாப்பு நிலைமையை மனதில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டது என்றார்.
2025, மே 06, 07 அன்று, இந்திய ஆயுதப்படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கின என்று குறிப்பிட்ட அமைச்சர், இது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை, அதன் அடையாளம் மற்றும் நாட்டு மக்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் கொள்கையின் மீதான அரசின் பொறுப்பின் நிரூபணம் என்று தெரிவித்தார். நமது ராணுவத் தலைமை அதன் முதிர்ச்சியைக் காட்டியது மட்டுமல்லாமல், இந்தியா போன்ற பொறுப்புள்ள சக்தியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உத்திசார்ந்த ஞானத்தையும் வெளிப்படுத்தியது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
Matribhumi Samachar Tamil

