ரூ 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று தில்லி-என்சிஆர் இந்திய அரசிடமிருந்து குறிப்பிடத்தக்க பரிசைப் பெற்றுள்ளது என்றும், இந்தியாவின் நகர்ப்புற இயக்கம் மேலும் விரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நமோ பாரத் ரயிலில் சாஹிபாபாத்தில் இருந்து நியூ அசோக் நகர் வரை பகலில் பயணம் செய்ததை நினைவு கூர்ந்த திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்திய நகரங்களில் பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் பல இளைஞர்களுடன் உரையாடியதாக கூறினார். நமோ பாரத் திட்டம் நிறைவேறியதும், தில்லி-மீரட் பாதையில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தில்லி-என்சிஆர் மக்களுக்கு அவர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பு பயணத்தில் இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு தற்போது 1,000 கிலோமீட்டர்களை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டினார். 2014-ம் ஆண்டில், நாடு தங்களுக்கு வாய்ப்பு வழங்கியபோது, மெட்ரோ இணைப்பின் அடிப்படையில் இந்தியா உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் கூட இல்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா மெட்ரோ கட்டமைப்பில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய தனது அரசின் ஆட்சிக் காலத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு 248 கிலோமீட்டர்கள் மட்டுமே என்றும், அது வெறும் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் 752 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய மெட்ரோ பாதைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்று, நாடு முழுவதும் 21 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகின்றன, தற்போது 1,000 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்கள் விரைவான வளர்ச்சியில் உள்ளன. தில்லி மெட்ரோ விரிவாக்கம், இரண்டு புதிய வழித்தடங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டல் ஆகியவற்றைக் குறிப்பிட்ட திரு மோடி, குர்கானுக்குப் பிறகு, ஹரியானாவின் மற்றொரு பகுதி தற்போது மெட்ரோ கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். ரிதாலா-நரேலா-குண்ட்லி வழித்தடம் தில்லி மெட்ரோ கட்டமைப்பின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றாக இருக்கும், தில்லி மற்றும் ஹரியானாவில் உள்ள முக்கிய தொழில்துறை மையங்களுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு பயணத்தை இது எளிதாக்குகிறது. மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, தில்லியில் மெட்ரோ வழித்தடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 2014-ல் தில்லி-என்சிஆர் பகுதியில் மொத்த மெட்ரோ கட்டமைப்பு 200 கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்தது என்றும், இன்று அது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். “கடந்த பத்தாண்டுகளாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு முதன்மையான கவனம் செலுத்தி வருகிறது” என்று திரு மோடி கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு, உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் சுமார் ரூ 2 லட்சம் கோடியாக இருந்தது, அது இப்போது ரூ 11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நவீன இணைப்புக்கு, குறிப்பாக நகரங்களுக்குள் மற்றும் ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடன் இணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தில்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விரைவுச் சாலைகள் உருவாகி வருவதாகவும், தில்லி தொழில் வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய தலைநகரப் பகுதியில் பெரிய பன்னோக்கு சரக்கு போக்குவரத்து மையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் இரண்டு சரக்கு வழித்தடங்கள் குவிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் திரு மோடி எடுத்துரைத்தார். “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் உட்பட அனைவருக்கும் கண்ணியமான மற்றும் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய நவீன உள்கட்டமைப்பு உதவுகிறது” என்று அவர் மேலும் கூறினார். பரம ஏழைகளுக்கும் மருத்துவ வசதி சென்றடைய வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், ஆயுஷ், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளையும் அரசு ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் ஆயுஷ் முறை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவம் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் முதலாவது நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதை திரு மோடி எடுத்துரைத்தார். சில வாரங்களுக்கு முன்பு, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்டத்தை தாம் தொடங்கி வைத்ததாகவும் அவர் கூறினார். இன்று, மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட திரு மோடி, இந்த சாதனைக்காக தில்லி மக்களுக்கு தனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “உலகின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தலைநகராக மாறுவதற்கு இந்தியாவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது” என்று பிரதமர் கூறினார். “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்பதுடன், “இந்தியாவில் குணப்படுத்துவோம்” என்பதை மந்திரமாக உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு மக்கள் இந்தியாவில் ஆயுஷ் சிகிச்சைகளைப் பெறுவதற்கு வசதியாக சிறப்பு ஆயுஷ் விசா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் இந்த வசதியின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முயற்சிகள் தில்லியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி. அதிஷி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். …