Thursday, January 09 2025 | 02:55:31 AM
Breaking News

மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Connect us on:

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ், தனது மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஒய்.எஸ்.ஆர் கடப்பாவில்  முற்பகல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கான உத்திகளை வழிநடத்துவதற்கும் அந்தந்த மாவட்டங்களில்  குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கேற்ப  இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.2018-ல் தொடங்கப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டமானது வளர்ச்சியடையாத பிராந்தியங்களை உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மாதிரிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வருகை இந்த இயக்கத்தில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

மாவட்டத்தின் முன்னேற்றம் குறித்த விரிவான விளக்கத்துடன் தனது நாளைத் தொடங்கிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முதல் நிகழ்ச்சியாக சி.கே.தின்னே மண்டலில் உள்ள நாகிரெட்டிபள்ளியில், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் –  மாதிரி கிராம சுகாதார மற்றும் ஆரோக்கிய கிளினிக்கை ஆய்வு செய்யும் பணி அமைந்தது. அத்தியாவசிய மருத்துவ சேவைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் எட்டக்கூடியதாக இருப்பதை  இந்த கிளினிக் உறுதி செய்கிறது. கிராமப்புற மக்களுக்கு சுகாதார வசதிகள் கிடைப்பது எளிமையாக்கப்பட்டு உள்ளது.

தமது பயணத்தின் போது, டாக்டர் ஜிதேந்திர சிங் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் கலந்துரையாடினார், அவர்களின் சவால்கள் மற்றும் அத்தகைய முன்முயற்சிகளின் உருமாறும் தாக்கம் பற்றிய நேரடி அனுபவ அறிவைப் பெற்றார். கிராமப்புறங்களில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு முக்கியமான முன் தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதில் கிளினிக்கின் பங்கை அவர் பாராட்டினார்.

புக்கலப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழந்தைகள் மற்றும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். மதிய உணவு, சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் ஊட்டச்சத்து கல்வி உள்ளிட்ட மையத்தின் முயற்சிகள் ஆரோக்கியமான சமூகத்தை வளர்ப்பதற்கான முக்கிய கருவிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டன. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பெண்களுடன் பேசிய அமைச்சர், எதிர்கால சந்ததியினருக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க தாய் -சேய் ஆரோக்கியத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங்கின் அடுத்த இலக்கு புக்கலப்பள்ளியில் உள்ள விவசாய நிலங்களாகும். அங்கு அவர் முற்போக்கான விவசாய முறைகளைக் கவனித்தார். திசு வளர்ப்பு முறையிலான வாழைத் தோட்டங்கள், சாமந்தி சாகுபடி, சுரைக்காய் வயலுடன் கூடிய நிரந்தரப் பந்தல் ஆகியவற்றை  அவர் பார்வையிட்டார். அரசுத் திட்டங்களின் உதவியால் மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்கள் நவீன தொழில் உத்திகள் எவ்வாறு உற்பத்தியை அதிகரித்து உள்ளன என்றும் விவசாயிகளின் வருவாய் எப்படி உயர்ந்துள்ளது என்றும் எடுத்துக் காட்டுகிறது. உள்ளூர் விவசாயிகள் தங்கள் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மாவட்டத்தின் நீடித்த வளர்ச்சி உத்தியின் முக்கிய அங்கமான நீர் சேமிப்பு முயற்சிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். நீர் மேலாண்மையில் சமூகம் சார்ந்த அணுகுமுறையைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், தண்ணீர் பற்றாக்குறையைத் தணிப்பதிலும், நீண்டகால சுற்றுச்சூழல் சமநிலையை உறுதி செய்வதிலும் அதன் பங்கை வலியுறுத்தினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தின் பயனாளிகளைச் சந்தித்து, அவர்களின் வாழ்வாதாரத்தில் அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்ள விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். வேளாண் சேவைகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்று பயிற்சி அளிப்பதன் மூலம் பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.  இந்த திட்டம், வருமான உருவாக்கத்திற்கான புதிய வழிகளைக் காட்டுகிறது.  இந்த முயற்சியின் கீழ், 2024-25 மற்றும் 2025-26 க்கு இடையில் 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும்.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் இலக்குகளான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், சமூகங்கள் தங்கள் வளர்ச்சிப் பயணத்தை பொறுப்பேற்க அதிகாரம் அளித்தல் ஆகிய இலக்குகளை டாக்டர் ஜிதேந்திர சிங் தமது நிகழ்ச்சிகள் முழுவதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இந்த இலக்குகளை உறுதியான விளைவுகளாக மாற்றுவதில் மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிமக்களின் கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார்.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்களை மனிதசமுதாயத்தின் நலனுக்காக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதே சவால் – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் இனி விருப்பப்பட்டால் தேர்ந்தெடுத்துக்கொள்பவை அல்ல, அவை எதிர்காலத்திற்கான ஒரே சாத்தியமான தேர்வாகும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் …