புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 78-ம் ஆண்டு நிறுவன தின விழாவில் மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ‘அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சியுடன்’ என்ற வழிகாட்டுதல் கொள்கைக்கு ஏற்ப மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர தயாரிப்புகள் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்டார். தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்துவதே தரமான சூழல் அமைப்பின் அடித்தளம் என்று அவர் மேலும் கூறினார். நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த, சிறிதும் பாதிப்பில்லாத குறைபாடுகள் இல்லாத தரமான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் முன்னேற்றம் அதன் சுயமான தரங்களால் தீர்மானிக்கப்படும் என்பதோடு அவை உலகளவில் அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பைகள் முதல் இயந்திரங்கள் வரை, பொறியியல் முதல் மருத்துவப் பொருட்கள் வரை ஒவ்வொரு துறையிலும் 23,500-க்கும் மேற்பட்ட தரநிலைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று திரு ஜோஷி கூறினார்.
இதுவரை 44.28 கோடி தங்கம், நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும் என்ற நுகர்வோர் கோரிக்கை உள்ளது என்று கூறிய திரு ஜோஷி, இது குறித்து பிஐஎஸ் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தரம், நம்பிக்கை மற்றும் சிறப்பு ஆகிய முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துவதில் பிஐஎஸ்-ன் பாரம்பரியம் மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்காக மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.