Thursday, January 09 2025 | 03:22:30 AM
Breaking News

சென்னை ஐஐடி, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தை தொடங்கியுள்ளது

Connect us on:

 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது.

மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடம், சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் ஆராய்ச்சி– தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சென்னை ஐஐடி -ல் இருந்து 36 கி.மீ. தொலைவில், தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியத் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் சிறப்பு வசதிகள் இங்கே உள்ளன. இது சிக்கலான அலைகள், கடல் நீரோட்டத்தைக் கையாளக் கூடிய பல்திசை ஆழமற்ற அலைப்படுகையாகும்.

துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின்  மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிக்கூடம், துறைமுகங்கள்- கடல்சார் துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள், மேம்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மையமாகும். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகச் செயல்படுவதுடன், துறைமுகங்கள், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவையும் இது வழங்குகிறது.

இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் அவசியத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் முரளி, “இந்த ஆராய்ச்சிக் கூடம் சர்வதேச அரங்கில் சென்னை ஐஐடி-ஐ பெரிய அளவில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும். ஆராய்ச்சி- தொழில் பயன்பாடுகளுக்கான ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆய்வகத்தில் அலைகளை உருவாக்க பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது” என்றார்.

சென்னை ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் வி.ஸ்ரீராம் கூறுகையில், “சில பொருட்கள் இங்கு கிடைக்காததால் நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம் மற்ற எல்லாவற்றையும் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்க முடிம் என பெருமையுடன் கூறுவேன். இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் புனையமைப்புகளில் (fabrications) பெரும்பாலானவை சென்னை ஐஐடி உருவாக்கியவை. புதிய துறைமுகங்கள், கடல்சார் பொறியியல், உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள் என மத்திய அரசின் எதிர்கால முன்முயற்சிகளை கருத்தில் கொண்டு ஆராய்ச்சிக் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

பல்கலைக்கழக அளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல்அலை நீரோட்டம் மற்றும் படுகையை இயக்கி வரும் ஜெர்மனியின் ஹானோவரில் உள்ள லீப்னிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டார்ஸ்டன் ஸ்லூர்மான்இந்த புதிய ஆராய்ச்சிக் கூடம் அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடுவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கட்டமைப்புகளில் ஏற்படும் முப்பரிமாண அலைகளின் தாக்கம் முக்கியமானது என்பதால், அடிப்படைப் புரிதலுக்கும் பயன்பாட்டுத் திட்டங்களுக்கும் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். துறைமுகம், கடல்சார்ந்த, கடற்கரைக்கு அப்பால், உள்நாட்டு நீர்வழிகள், ஆழமற்ற நீர்வழிமாற்றுத் திட்டங்களிலும் இந்தப் படுகையைப் பயன்படுத்தலாம்.

 

இந்தியக் கடலோரப் பகுதிகளில் புதிய துறைமுகங்கள் வளர்ந்துவரும் நிலையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிக்கூடம் திட்டமிடலுக்கு உதவும் முக்கிய கருவியாக அமைந்துள்ளது. இந்த அளவுக்கு பெரிய அளவிலான ஆய்வகத்தை உருவாக்குவதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவைக் கொண்டு, இந்தியாவில் உள்ள என்ஐடி-கள், ஐஐடி-கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இத்தகைய அதிநவீன ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதற்கு சென்னை ஐஐடி உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது.

தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பரந்த அளவிலான பிரச்சனைகளுக்கு துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் பயனளிக்கும் தீர்வுகளை வழங்குகிறது. இதுதவிர உள்ளூர், பிராந்திய, தேசிய, சர்வதேச அளவிலான கடல்சார் போக்குவரத்துத் துறையில் அறிவியல் ரீதியான ஆதரவு, மதிப்புவாய்ந்த கல்வி, பயன்பாட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவற்றையும் இந்த மையம் அளித்து வருகிறது.

About Matribhumi Samachar

Check Also

சென்னை ஐஐடி ‘சாரங் 2025’ கலாச்சார விழா: ஜனவரி 9 முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார விழாவின் 51-வது …