நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை குறைந்த செலவில் வழங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்திய ரயில்வே புவியியல், கலாச்சாரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ரயில்வே தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76 சதவீதத்தை நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் 4 நாட்களில் செலவிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரி 5 வரை இந்திய ரயில்வேயின் சமீபத்திய செலவின அறிக்கையின்படி, திறன் மேம்பாட்டில்தான் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ரயில் பயணத்தை நாட்டில் உலகத் தரம் வாய்ந்த அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
136 வந்தே பாரத் ரயில்கள், அகல ரயில்பாதையில் 97 சதவீதம் மின்மயமாக்கல், புதிய வழித்தடங்களை அமைத்தல், பாதை மாற்றம், இரட்டிப்பாக்குதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்தில் முதலீடு போன்றவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியான மூலதன செலவினத்தின் பலன்களை இப்போது காண முடிகிறது. இந்த மூலதன செலவு கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறைந்த செலவில் விரைவான, பாதுகாப்பான மற்றும் உலகத்தரம் வாய்ந்த பயணத்தை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் வேக சோதனை, பாதுகாப்பு சான்றிதழ் கட்டத்தில் இருப்பதால், இந்தியாவில் ரயில் பயணிகள் “நீண்ட தூர” பயணத்திற்காக மிக விரைவில் உலகத் தரம் வாய்ந்த பயணத்தை அனுபவிக்க தயாராக உள்ளனர். இது ஒட்டுமொத்த பயண அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும்.
பரந்த புவியியல், கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மையுடன் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பது போன்ற சவால்களுக்கிடையிலும் இந்திய ரயில்வே புதிய மற்றும் நவீன வகையில் நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகளில் முதலீடு செய்வதன் மூலம் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளை அது முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில், தற்போது விதைக்கப்படும் முன்னேற்றத்திற்கான விதைகள் நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த பலன்களை அளிப்பதை இந்திய ரயில்வே உறுதி செய்து வருகிறது. இந்தியாவின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சுமைகளை பூர்த்தி செய்வதும், அதன் எதிர்காலத்தை உருவாக்குவதில் அதிக முதலீடு செய்வதும் ஒரு நிறுவனத்திற்கு எளிதான பணி அல்ல. ஆனால் இந்த நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு நாட்களில் 1198 கோடி மூலதன செலவினங்களுடன், இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த மூலதன செலவு 76 சதவீதமாக உள்ளது.
2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் ரயில்வேக்கான மொத்த மூலதன செலவு ரூ.2,65,200 கோடியாகவும் மொத்த பட்ஜெட் ஆதரவு ரூ .2,52,200 கோடியாகவும் உள்ளது. இதில் ரூ.192,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரயில்பெட்டிகளைப் பொறுத்தவரை பட்ஜெட்டில் ரூ.50,903 கோடி ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காக, வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடான 34,412 கோடி ரூபாயில், 28,281 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது ஒதுக்கப்பட்ட தொகையில் 82 சதவீதமாகும். இந்திய ரயில்வேயை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இது நாள்தோறும் சராசரியாக “2.3 கோடி இந்தியர்களை” நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது.