வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார வளமை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டாடுதல்
வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் என்பது பல நூற்றாண்டுகளின் மரபுகள், மாறுபட்ட மொழிகள், வளமான நாட்டுப்புறக் கதைகள் போன்ற துடிப்புமிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது. அனைத்து சமூகமும், அனைத்து மாநிலமும் தனக்கே உரிய தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் நவீன வளர்ச்சியின் அசாதாரண கலவையை தன்னகத்தே கொண்டுள்ள பிராந்தியமாக இது உள்ளது. அசாமின் பசுமையான தேயிலைத் தோட்டங்கள் முதல் மிசோரமின் மலைகள் வரை, மணிப்பூரின் அழகிய நதிகள் முதல் நாகாலாந்தின் துடிப்பான திருவிழாக்கள் வரை, அனைத்தையும் தன்னகத்தே கொண்டு வடகிழக்கு மாநிலங்களின் வாழ்க்கை, கலை மற்றும் பாரம்பரியம் ஆகியன உயிர்த் துடிப்புடன் திகழ்கின்றன.
இந்த குறிப்பிடத்தக்க கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், முதலாவது அஷ்டலட்சுமி மகா திருவிழா 2024 டிசம்பர் 6 முதல் 8 வரை தில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது. அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் அழகு, பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த பிரம்மாண்டமான திருவிழா டிசம்பர் 6-ம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது. ‘அஷ்டலக்ஷ்மி’ என்று அழைக்கப்படும் இந்த மாநிலங்கள் லக்ஷ்மி தேவி உருவகப்படுத்திய எட்டு வகையான வளமையைக் குறிக்கின்றன: செழிப்பு, செழுமை, தூய்மை, செல்வம், அறிவு, கடமை, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு.
வடகிழக்கு இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள்
உள்கட்டமைப்பு மேம்பாடு: சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் கட்டமைப்புகளின் விரிவாக்கம் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள்: கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் பாரம்பரிய கலைகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் முடியும்.
வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள்: வளமான சமவெளிகள் மற்றும் வலுவான இயற்கை விவசாய பாரம்பரியத்துடன், உணவு பதனப்படுத்தும் தொழில்கள், குளிர்பதன சேமிப்பு மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்: வடகிழக்கு இந்தியாவின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை சூழலுடன் கூடிய சுற்றுலா, சாகச சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது.