மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைப் பட்டியலில் மற்றுமொரு மைல்கல் திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3000-க்கு பாஸ் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய நெடுஞ்சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வோருக்கு பெருமளவில் உதவிகரமாக இருக்கும் புரட்சிகரமான திட்டம் இது என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப சாலை கட்டமைப்புகளும் வாகனத்தில் செல்பவர்களுக்கான வசதிகளும் செய்யப்படுவதால் சாலைப் பயணமும் எளிதாகி வருகிறது என்றும் அந்த அறிக்கையில் மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த ‘ஃபாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்டதால் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை இல்லாத சூழல் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, வருடாந்திர பாஸ் வழங்கும் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு செலவைக் குறைப்பதுடன், பெரிய அளவிலான சேமிப்புக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக திரு எல் முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Matribhumi Samachar Tamil

