Monday, December 08 2025 | 09:54:52 PM
Breaking News

புதிய குற்றவியல் சட்டங்களின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா உரையாற்றினார்

Connect us on:

புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர்  திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, முதல்வர் திருமதி. ரேகா குப்தா, மத்திய உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய திரு அமித் ஷா,  பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மலிவானதாக, எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும், நீதித்துறை செயல்முறையை எளிமையாகவும், நிலையானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் என்றும் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்தின் பொற்காலம் தொடங்க உள்ளது என்றும் அவர் கூறினார். வரும் நாட்களில், நமது குற்றவியல் நீதி அமைப்பு ஒரு புதிய சகாப்தத்தில் நுழையும் என்றும், இது நீதி உடனடியாக வழங்கப்படும் என்ற வலுவான நம்பிக்கையை மக்களிடையே நிச்சயமாக ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் நீதி உடனடியாகக்  கிடைக்கும் என்ற நம்பிக்கையை  புதிய சட்டங்கள் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

குடிமக்களுக்கு நீதி வழங்குவதற்குப் பொறுப்பு வகிக்கும்  மூன்று முக்கிய தூண்களான காவல்துறை, வழக்குத் தொடர்தல் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது இந்த சட்டங்கள் கடுமையான காலக்கெடுவை விதிக்கின்றன என்று அவர் விளக்கினார். புதிய சட்டங்கள் 90 நாட்களுக்குள் விசாரணைகளை முடித்தல், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தல், குற்றச்சாட்டுகளை உருவாக்குதல் மற்றும் தீர்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்கான காலக்கெடுவைக் குறிப்பிடுகின்றன என்றும் திரு. ஷா மேலும் கூறினார்.

புதிய சட்டங்களில் பல தொழில்நுட்ப அடிப்படையிலான விதிகளும் அடங்கும் என்றும், அவை செயல்படுத்தப்பட்டவுடன், குற்றவாளிகள் சந்தேகத்தின் பலனைப் பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த வாய்ப்பும் இருக்காது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். புதிய குற்றவியல் நீதி அமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு, நம் நாட்டில் தண்டனை விகிதம் கணிசமாக மேம்படும் என்றும், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். மூன்று புதிய சட்டங்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமது நீதி அமைப்பு உலகின் மிக நவீன நீதி அமைப்பாக மாறும் என்று திரு ஷா கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”