காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் இயந்திரவியல் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான டிஎஸ்டி என்சிஎஸ்டிசி திட்டத்தின் கீழ் “3டி ஸ்கேனிங் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பங்களில் அறிவியல் விழிப்புணர்வு பயிலரங்கு பயிற்சி திட்டம்” என்ற தலைப்பில் ஒரு தொடர் பயிற்சி முறையை 2024 டிசம்பர் 09 முதல் 2025 மார்ச் மாதம் வரை நடத்த உள்ளது.
இந்த நிகழ்ச்சியை 2024 டிசம்பர் 09 அன்று காரைக்கால் கல்வி அலுவலர் திருமதி.விஜயமோஹனா தொடங்கிவைத்தார். புதுச்சேரி என்ஐடி இயக்குநர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் தலைமை தாங்கினார். பதிவாளர் முனைவர்.சீ.சுந்தரவரதன், இணைப் பேராசிரியர். ஜி.எஸ். மகாபத்ரா, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை துறை டீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதுச்சேரி என்ஐடி-ன் சிக்மா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர். எம்.வி.ஏ. ராஜு பாஹுபலேந்திருனி, முக்கிய ஆராய்ச்சி பொறுப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தி பயிற்சியின் இலக்கு மற்றும் மகத்துவத்தை விளக்கினார். டாக்டர். ஏ. ஜானி மெர்டன்ஸ், இயந்திரவியல் துறை தலைவர், துறையின் சாதனைகள் மற்றும் பிற செயல்பாடுகளை விளக்கினார்.
திருமதி. விஜயமோஹனா பேசிய போது, 3டி பிரிண்டிங் மற்றும் 3டி ஸ்கேனிங் போன்ற புரட்சிகரமான தொழில்நுட்பங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு 3டி ஸ்கேனிங் பற்றிய அடிப்படை விபரங்களை அறிமுகப்படுத்திய அவர், இந்த தொழில்நுட்பம் பொருளின் துல்லியமான விவரங்களை அதை டிஜிட்டல் மாதிரியாக மாற்ற உதவுகிறது என்பதை விளக்கினார்.
நிகழ்ச்சியில், பல துறைகளின் டீன்கள், துணை டீன்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இப்பயிற்சியில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.