புதுதில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இன்று (28.07.2025) நடைபெற்ற ஆம் ஆண்டு உலகப் புலிகள் தினம் 2025 கொண்டாட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுற்றுச்சூழல் சமநிலை, குழந்தைகளிடையே வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு, இயற்கைக்கு நன்றி செலுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து இளம் மனங்களுக்கு உணர்த்தியதற்காக பள்ளிகளையும் ஆசிரியர்களையும் திரு யாதவ் பாராட்டினார்.
வனவிலங்கு பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அமைச்சர், “இந்தியாவில் 2014-ல் 46 என்றிருந்த புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் 12 அதிகரித்து இப்போது 58 ஆகியுள்ளது. இந்த வளர்ச்சி நாட்டின் தேசிய விலங்கைப் பாதுகாப்பதில் பிரதமரின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்றார்.
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற நாடு தழுவிய இயக்கம் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், 58 புலிகள் காப்பகங்களிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும் என்றும் இது உலகின் மிகப்பெரிய இயக்கங்களில் ஒன்றாகும் என்றும் கூறினார்.
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு விவரிப்பின் தனித்துவமான அம்சத்தை எடுத்துக்காட்டும் நான்கு முக்கியமான வெளியீடுகளையும் அமைச்சர் வெளியிட்டார்: “இந்தியாவின் புலிகள் நிலப்பரப்பில் பூனைகளின் நிலை” என்ற தலைப்பிலான அறிக்கை ஸ்ட்ரைப்ஸ் இதழ் – உலகளாவிய புலிகள் தின சிறப்பு பதிப்பு ஆகியவையும் வெளியிடப்பட்டன.
“இந்தியாவில் புலிகள் காப்பகங்களில் அருவிகள்” மற்றும் “இந்தியாவின் புலிகள் காப்பகங்களுக்குள் உள்ள நீர்நிலைகள்” என திரு பரத் லால் மற்றும் டாக்டர். எஸ்.பி. யாதவ் எழுதிய புத்தகங்கள் இவ்விழாவில் வெளியிடப்பட்டன. வனவிலங்குகள் தொடர்பான குற்றம் கண்டறிதல், விசாரணை மற்றும் வழக்குத் தொடுத்தல்; வனவிலங்கு கண்காணிப்பு; வனவிலங்கு வாழ்விட மேலாண்மை; வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் எதிர்ப்பு நடவடிக்கைகள்; மக்கள் பங்கேற்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு, தன்னார்வ கிராம இடமாற்றப் பணிகள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருதுகளையும் அமைச்சர் திரு யாதவ் வழங்கினார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Matribhumi Samachar Tamil

