மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (17.08.2025) தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு (ஐஐடி) சென்றார். அங்கு அவர் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் திரு ரங்கன் பானர்ஜி ஆகியோரும் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய தருணம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
மாணவர்களின் கனவுகள், விருப்பங்கள், ஆராய்ச்சிகள், அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்கள் போன்றவை குறித்து அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடினார். திறன்களை மேம்படுத்துதல், புதுமை உணர்வை விரிவுபடுத்துதல் ஆகியவை குறித்த தமது கருத்துக்களையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
புதுமையான யோசனைகளை முன்வைக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையிலும் நாம் தற்சார்பை எட்டுவதற்காகப் பாடுபடவும் அமைச்சர் மாணவர்களை ஊக்குவித்தார்.
ஐஐடி மாணவர்கள் அதிக அளவில் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்கப் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நமது வருங்கால தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், இந்தியாவை உலகளாவிய தீர்வுகளின் மையமாக மாற்றுவதற்கும் கண்டுபிடிப்பாளர்களுடனும் ஆராய்ச்சியாளர்களுடனும் அரசு தோளோடு தோள் நிற்கிறது என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
Matribhumi Samachar Tamil

