சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (15.11.2025) பார்வையிட்டு, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தி வரும் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். பணிகளின் வேகம், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி இலக்குகளை அடைவது உட்பட திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். திட்டப் பணிகள் எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக நடைபெறுவதாக தொழிலாளர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு பொறியாளர் பிரதமரிடம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை கட்டமைக்கும் அனுபவத்தை நீங்கள் தனிப்பட்ட முறையில் எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று திரு நரேந்திர மோடி அவரிடம் கேட்டார். நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கு பங்களிப்பதில் அந்த பொறியாளர் பெருமை தெரிவித்தார். இது ஒரு “கனவுத் திட்டம்” என்றும் தமது குடும்பத்திற்கு ஒரு “பெருமைமிக்க தருணம்” என்றும் அவர் விவரித்தார். தேச சேவையின் உணர்வைப் பற்றிப் பேசிய பிரதமர், நாட்டிற்காகப் பாடுபட்டு, ஏதாவது பங்களிக்கும் உணர்வு எழும்போது, அது மகத்தான உந்துதலுக்கான ஆதாரமாக மாறும் என்றார்.
பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு ஊழியரான, முன்னணி பொறியியல் மேலாளர் ஸ்ருதி, கடுமையான பொறியியல் செயல்முறைகளை விளக்கினார். செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும், தமது குழு சாதக பாதகங்களை மதிப்பிட்டுத் தீர்வுகளை அடையாளம் காட்டுகிறது என்றும் குறைபாடற்ற பணியை உறுதிசெய்ய மாற்று வழிகளை தமது குழு ஆராய்கிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
இங்கு பெறப்பட்ட அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டால், நாட்டில் பெரிய அளவில் புல்லட் ரயில்கள் அறிமுகத்தை நோக்கி நகர முடியும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சோதனை நடைமுறைகளைத் தவிர்த்து, ஏற்கனவே உள்ள மாதிரிகளிலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சில நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்பட்டன என்பது பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே செயல்பாடுகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். இல்லையெனில், நோக்கம் இல்லாமல் செயல்பாடு நடைபெறும் என்று அவர் கூறினார். இதுபோன்ற பதிவுகளைப் பராமரிப்பது எதிர்கால மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றும் தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு ஊழியர் தமது உறுதிப்பாட்டை ஒரு கவிதை மூலம் வெளிப்படுத்தினார். அதற்கு பிரதமர் அவரைப் பாராட்டினார். இந்தப் பயணத்தின் போது மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உடனிருந்தார்.
பின்னணி:
இந்தியாவின் மிகவும் லட்சியமிக்க உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, சூரத்தில் கட்டுமானத்தில் உள்ள புல்லட் ரயில் நிலையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்.
இந்தப் பாதை சுமார் 508 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இந்த வழித்தடம் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, போய்சர், விரார், தானே, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும். இது இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
புல்லட் ரயில் திட்டம் நிறைவடைந்ததும், மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையிலான பயண நேரம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகக் குறையும். இந்த நகரங்களுக்கு இடையேயான பயணத்தை வேகமாகவும், எளிதாகவும், வசதியாகவும் மாற்றுவதன் மூலம் இத்திட்டம் பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இந்த திட்டம் அப்பகுதியில் வணிகம், சுற்றுலா, பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்றும், பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Matribhumi Samachar Tamil

