மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களின் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் இணையதள குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது மற்றும் வழக்குத் தொடர்வது ஆகிய முதன்மையான பொறுப்புகளைக் கொண்டுள்ளன.
இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் சட்ட அமலாக்கத் திறன்களை விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் உள்ளிட்ட கணினி குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை வலுப்படுத்த, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும்:
நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான இணையதள குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக ‘இந்திய இணையதள குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தை’ உள்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய தள குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான கணினிசார் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக, ‘தேசிய கணினிசார் குற்றங்கள் புகார் இணையதளம்’ (https://cybercrime.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் புகாரளிக்கப்பட்ட இணையதள குற்ற சம்பவங்கள், அவற்றை முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றுதல் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் சட்டத்தின் விதிகளின்படி சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேச சட்ட அமலாக்க முகமைகளால் கையாளப்படுகின்றன.
இதுவரை, 9.94 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களில் ரூ.3431 கோடிக்கும் அதிகமான நிதி மீட்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.