பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு மோடி, இன்று அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் திருவிழா என்று கூறினார். முன்னேற்றத்தின் ஒளி மக்களைச் சென்றடையும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையும் புதிய உயரங்களைத் தொடத் தொடங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும், அசாமின் முதல் முதலமைச்சரும், மாநிலத்தின் பெருமைக்குரியவருமான கோபிநாத் பர்தோலோயின் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார். திரு பர்தோலோய் அசாமின் அடையாளம், எதிர்காலம் மற்றும் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றும், அவரது சிலை எதிர்காலச் சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து, அவர்களுக்கு அசாம் மீது ஆழ்ந்த பெருமை உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். “நவீன விமான நிலைய வசதிகளும் மேம்பட்ட இணைப்பு உள்கட்டமைப்புகளும் எந்தவொரு மாநிலத்திற்கும் புதிய சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் நுழைவாயிலாக அமைகின்றன, மேலும் மக்களிடையே வளர்ந்து வரும் நம்பிக்கை மற்றும் திடமான உணர்வின் தூண்களாக நிற்கின்றன”, என்று பிரதமர் கூறினார். அசாமில் பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளும் விமான நிலையங்களும் கட்டப்படுவதை மக்கள் காணும்போது, அசாமிற்கு உண்மையான நீதி இறுதியாக கிடைக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இன்று இந்தியா மீதான உலகின் பார்வை மாறியுள்ளது என்றும், இந்தியாவின் பங்கும் மாறியுள்ளது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். வெறும் 11 ஆண்டுகளில் இது எவ்வாறு சாத்தியமானது என்று அவர் கேள்வி எழுப்பியதுடன், நவீன உள்கட்டமைப்பின் வளர்ச்சி இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றும் வலியுறுத்தினார். ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைவதற்காக, உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி இந்தியா 2047-ம் ஆண்டிற்காகத் தயாராகி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மாபெரும் வளர்ச்சிப் பயணத்தின் மிக முக்கியமான அம்சம் ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் பங்கேற்புதான் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு மாநிலமும் ஒன்றாக முன்னேறி, வளர்ந்த இந்தியா என்ற இலக்கிற்குப் பங்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசு பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கில் அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் முன்னணியில் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்று அசாம் இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக உருவெடுத்துள்ளது என்றும் திரு. மோடி தெரிவித்தார். அசாம், இந்தியாவை ஆசியான் நாடுகளுடன் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடக்கம் இன்னும் வெகுதூரம் செல்லும் என்றும், பல துறைகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு உந்துசக்தியாக அசாம் மாறும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். “அசாமும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய நுழைவாயிலாக மாறி வருகின்றன,” என்று திரு. மோடி வலியுறுத்தினார். பல்துறை இணைப்பு குறித்த தொலைநோக்குப் பார்வை இந்தப் பிராந்தியத்தின் நிலையையும் திசையையும் மாற்றியமைத்துள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். அசாமில் புதிய பாலங்கள் கட்டப்படும் வேகம், புதிய மொபைல் கோபுரங்கள் நிறுவப்படும் வேகம் மற்றும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தின் வேகம் ஆகியவை கனவுகளை நனவாக்கி வருவதாக அவர் கூறினார். இந்த நிகழ்வில் அசாம் ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு. சர்பானந்த சோனோவால், திரு. கே. ராம்மோகன் நாயுடு, திரு. முரளிதர் மோஹோல், திரு. பவித்ரா மார்கெரிட்டா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.