தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள, மத்திய அரசு 2015-ம் ஆண்டில் ‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்துக்கு’ ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்திகளுக்கு வழிவகுக்கிறது.
· இக்கொள்கையின் உறுதியான அமலாக்கத்தின் விளைவாக தொடர்ந்து வன்முறை குறைந்துள்ளது. 2010-ல் இடதுசாரி தீவிரவாதம் வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 73% குறைந்துள்ளது. இதன் விளைவாக ஏற்படும் இறப்புகள் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) 2010-ல் 1005 ஆக இருந்த நிலையில், அது 86% குறைந்து 2023-ல் 138 ஆக குறைந்துள்ளது. நடப்பு 2024-ம் ஆண்டில் (15.11.2024 வரை), இடதுசாரி தீவிரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களில் 25% வெகுவாக குறைந்துள்ளது.
· இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், 2013-ல் 10 மாநிலங்களில் 126-ஆக இருந்தது, 2024-ல் (ஏப்ரல் 2024 முதல்) 09 மாநிலங்களில் 38 மாவட்டங்களாக குறைந்துள்ளதால், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் புவியியல் ரீதியான பரவலும் கணிசமாகக் குறைந்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் குறித்து புகார் அளிக்கும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 465 ஆக இருந்தது, 2023-ம் ஆண்டில் 171 காவல் நிலையங்களாக கணிசமாகக் குறைந்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.