குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற ‘மக்களை மையமாகக் கொண்ட தேசியப் பாதுகாப்பு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் சமூகப் பங்கேற்பு’ என்ற தலைப்பில் உளவுத்துறை நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உறுதி செய்வதிலும் ஐபி எனப்படும் உளவுத்துறை ஒரு சிறந்த பங்கை வகித்து வருகிறது என்று கூறினார்.
இந்த சொற்பொழிவுக்கான கருப்பொருள் நமது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். ஐபி உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும், தேசியப் பாதுகாப்பு ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்ற விழிப்புணர்வை நமது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், தேசியப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்புகளின் முயற்சிகளுக்கு அவர்கள் மகத்தான ஆதரவை வழங்க முடியும் என்று அவர் கூறினார். நமது அரசியலமைப்பு மக்களின் அடிப்படைக் கடமைகளை பட்டியலிடுகிறது எனவும் இந்தக் கடமைகள் பல தேசியப் பாதுகாப்பின் பரந்த பரிமாணங்களுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.
சமூகப் பங்களிப்பு தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
நமது காவல்துறையும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்த சேவை மனப்பான்மை மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த நம்பிக்கை, மக்களை மையமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு உத்தியை உருவாக்குவதற்கு முக்கியமானது என்றும் இதில் சமூக பங்கேற்பு ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா பல விதமான பாதுகாப்பு சவால்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். எல்லைப் பகுதிகளில் பதற்றங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம், கிளர்ச்சி, வகுப்புவாத வன்முறை ஆகியவை பாதுகாப்பில் கவலைக்குரியவையாக இருந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில், இணையதள குற்றங்களும் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பொருளாதாரம், முதலீடு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கிய தேவைகளில் பாதுகாப்பும் முக்கியமான ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.
இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் நிலை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் ஆகியவற்றில் சமூக-பொருளாதார உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது இடதுசாரி தீவிரவாதத்தை செயல் இழக்கச் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
பொதுமக்களின் பங்கேற்பு, 21-ம் நூற்றாண்டின் சிக்கலான, பன்முக பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்தார். பொதுமக்கள் பங்கேற்பின் மூலம், அமைதியான, பாதுகாப்பான, வளமான இந்தியாவை உருவாக்குவதை நோக்கி விரைவாக முன்னேற முடியும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
Matribhumi Samachar Tamil

