வழக்கு பதிவு செய்வதற்கு முந்தைய நிலையிலேயே குறைகள் தீர்த்துவைக்கப்படுவதை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளில், நுகர்வோர் விவகாரங்கள் துறை இந்த ஆண்டு தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டம் என்பது தேசிய நுகர்வோர் உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான சிறப்பு திறன் மேம்பாட்டு முயற்சிகளை உள்ளடக்கியதாகும். நுகர்வோர் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் உதவி மையம் மூலம் விரிவான ஆதரவை வழங்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த முயற்சியில், தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் செயல்படுவர்களுக்கு வாடிக்கையாளர் குறைகளைக் கையாள்வதற்கான சிறப்பு பயிற்சியை அமேசான் இந்தியாவுடன் இணைந்து இத்துறை 2024 டிசம்பர் 11 அன்று நடத்தியது. மென் திறன்கள், தொழில்முறை கண்ணோட்டங்கள் மற்றும் அத்தியாவசிய வாடிக்கையாளர் சேவை நடத்தைகள் ஆகியவற்றை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் தீவிர 40 மணி நேர பயிற்சித் திட்டத்தை உதவி மையத்தில் செயல்படுவோர் மேற்கொண்டனர். திறன் வளர்ப்பு திட்டம் முடிந்ததும், பங்கேற்பாளர்கள், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் அமேசான் இந்தியாவிடமிருந்து கூட்டு சான்றிதழைப் பெறுவார்கள். இந்த சான்றிதழ் நுகர்வோர் குறை தீர்ப்பில் அவர்களின் மேம்பட்ட திறன்கள் மற்றும் அறிவை அங்கீகரிக்கிறது. மேலும் தேசிய நுகர்வோர் உதவி மையம் மூலம் சிறந்த ஆதரவை வழங்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. 17 மொழிகளில் (அதாவது இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி, பஞ்சாபி, நேபாளி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மைதாலி, சந்தாலி, பெங்காலி, ஒடியா, அசாமி, மணிப்புரி) நாடு முழுவதிலுமிருந்து வரும் அழைப்புகளைக் கையாள உதவி மையத்தில் இணைந்து செயல்படும் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.