நாட்டின் இளைஞர்களிடையே தொன்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மண்டல கலாச்சார மையங்கள் வாயிலாக தேசிய சமஸ்கிருத திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். இதுவரை, 14 தேசிய சமஸ்கிருத திருவிழாவும், 04 மண்டல அளவிலான விழாக்களும் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்பட்டன.
1890 ஆம் ஆண்டு அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நவம்பர் 28-ம்தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், பொதுத்துறை, தனியார் கூட்டு பங்களிப்புடன் நிதி ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன.
நாட்டில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக தேசிய கலாச்சார நிதியம் நன்கொடைகளைப் பெறுகிறது. தேசிய பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை புனரமைத்தல், கலைப் படைப்புகள், பொது நூலகங்களை அமைத்தல், பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கியப் பணிகளாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.