ஜிஎஸ்ஐ புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைதலைவர் திரு ஜக்தீப் தன்கர் திறந்து வைக்கிறார். டிசம்பர் 15-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் திரு நரேந்திர சிங் தோமர், இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் திரு. அசித் சாஹா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா சந்தை கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த அதிநவீன அருங்காட்சியகம், புவி அறிவியல் கல்வி மற்றும் பொது ஈடுபாட்டிற்கான மையமாக மாற உள்ளது. ஜி.எஸ்.ஐ புவி அறிவியல் அருங்காட்சியகம், புவி அறிவியலின் அதிசயங்களை வெளிப்படுத்தவும், பொதுமக்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கவும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஒரு தனித்துவமான முயற்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் பூமி, வளிமண்டலம் மற்றும் கடல் அறிவியல் மற்றும் வாழ்க்கையின் பரிணாமம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட இரண்டு காட்சியகங்கள் உள்ளன. அதிநவீன கண்காட்சிகள், அரிய புவியியல் மாதிரிகள் பன்னூடக காட்சிகளுடன், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், பொது மக்களை ஈடுபடுத்த அருங்காட்சியகம் உறுதியளிக்கிறது.
குவாலியர் மாநகராட்சி மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் கவுன்சில் (என்.சி.எஸ்.எம்) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் புவி அறிவியல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும் பூமி, அதன் வளங்களைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் ஜி.எஸ்.ஐ.யின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.