புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று அவரைப் பிரதமர் பாராட்டியுள்ளார். ராஜ் கபூர் வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற கலாச்சாரத் தூதராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள் திரு நரேந்திர மோடி, அடுத்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று, ஒரு தொலைநோக்கு திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரான புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100 -வது பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். அவரது மேதைமை தலைமுறைகளைக் கடந்து, இந்திய, உலகளாவிய சினிமாவில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது.”
“ராஜ் கபூரின் சினிமா மீதான ஆர்வம் இளம் வயதிலேயே தொடங்கியது. ஒரு முன்னோடி கதைசொல்லியாக உருவாக அவர் கடுமையாக உழைத்தார். அவரது படங்கள் கலைத்திறன், உணர்ச்சி, சமூக வர்ணனை ஆகியவற்றின் கலவையாக இருந்தன. அவை சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளையும் போராட்டங்களையும் பிரதிபலித்தன.”
“ராஜ் கபூர் படங்களின் கதாபாத்திரங்கள், மறக்க முடியாத பாடல்கள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே தொடர்ந்து எதிரொலிக்கின்றன. அவரது படைப்புகள் பல்வேறு கருப்பொருள்களை எளிதாகவும் சிறப்பாகவும் முன்னிலைப்படுத்துவதை மக்கள் பாராட்டுகிறார்கள். அவரது படங்களின் இசையும் மிகவும் பிரபலமானது.”
ராஜ் கபூர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மட்டுமல்ல. இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற கலாச்சார தூதர். அடுத்து வரும் பல தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். நான் மீண்டும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். படைப்பு உலகிற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன்.”