இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிச் சேவை அமைப்பு (IP&TAFS) தனது 50-வது நிறுவன தினத்தை புதுதில்லியில் இன்று (14.12.2024) கொண்டாடியது. குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராக இதில் பங்கேற்றார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குடிமைப் பணி அதிகாரிகள் தொழில்நுட்ப நுண்ணறிவு கொண்டவர்களாகவும், பாரம்பரிய நிர்வாக எல்லைகளைக் கடந்து மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தினார். முக்கியமான முடிவுகளுக்கு மனித மேற்பார்வையைப் பராமரிக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் தொலைத்தொடர்பு, அஞ்சல் துறைகளை வடிவமைப்பதில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிச் சேவை அமைப்பு வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், தொலைத் தொடர்புத் துறையில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவது, ஓய்வூதியதாரர்களுக்கு அதிகாரமளித்தல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பணியாளர்களின் திறன்களை அதிகரித்தல் ஆகியவை மூன்று தூண்கள் என்றார். தொலைத் தொடர்புத் துறையின் சாம்பான் ஓய்வூதிய மாதிரி குறித்து அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையத்தின் உறுப்பினர் (நிதி) திரு மணீஷ் சின்ஹா, அஞ்சல் துறை செயலாளர் திருமதி வந்தனா கவுல், தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.