இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னோடி நிறுவனமான சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கழகத்தின் (என்.ஐ.டி.டி.டி.ஆர்) வைர விழாவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 15, 2024 அன்று இந்நிறுவனம் 61-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஏ.ஐ.சி.டி.இ தலைவர், இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் இடையிலான ஆழமான தொடர்பை எடுத்துரைத்தார். டிஜிட்டல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்த ஏ ஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி) / வி ஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி), ஜெனரேட்டிவ் ஏ.ஐ. மற்றும் பிளாக்செயின் போன்ற வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் திறனை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ நிறுவனங்களில் பணிபுரியும் நாட்டின் தலைசிறந்த பொறியாளர்கள் நாட்டிலுள்ள சாதாரண பொறியியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் என்றும், உலகில் குறைந்த செலவில் தரமான சிறந்த விண்வெளி தொழில்நுட்பங்களை நமது பொறியாளர்கள் எட்டியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார். தலைமையிலான நாட்டில் புத்தொழில் சூழல் சிறப்பாக உள்ளதாகவும் 1.7லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும் உலகளவில் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தையும் பேராசிரியர் சீதாராம் பாராட்டினார். எதிர்காலத்தை வடிவமைக்கவும், சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லவும் பொறியாளர்கள் தங்களது புதுமையான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உயர்கல்வி நிறுவனங்களில் 50% சேர்க்கையை 2035ஆம் ஆண்டுக்குள் எட்டும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் தமிழ்நாடு 52% என்ற சராசரியுடன் தேசிய சராசரியான 28.3% விட முன்னணியில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
என்.ஐ.டி.டி.டி.ஆர் சென்னை வைர விழா புத்தகம், வைர விழா நினைவு மலரையும் ஏ.ஐ.சி.டி.இ தலைவர் வெளியிட்டார். உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான ‘என்.ஐ.டி.டி.டி.ஆர் களஞ்சியம்’ – டிஜிட்டல் கல்வி இணைப்பு வலைத்தளம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் மனநல ஆரோக்கியக் காக்கும் பயிற்சி திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர் இயக்குநர் பேராசிரியர் உஷா நடேசன் தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்விக்கான திட்ட வரைவு அறிக்கையை இயக்குனர் பேராசிரியர் முனைவர் உஷா நடேசன் ஏஐடீசிஇ தலைவரிடம் வழங்கினார். தனது தலைமையுரையில், கடந்த மூன்று தசாப்தங்களாக தொழில்நுட்பக் கல்விக்கு நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துரைத்தார். ஆசிரியர் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய ஈடுபாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் என்.ஐ.டி.டி.டி.ஆர் நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.
ஸ்வயம் மற்றும் அடல் போன்ற தேசிய இயக்கங்களில் நிறுவனத்தின் ஈடுபாடு மற்றும் ஏ.ஐ.சி.டி.இயின் மார்க தர்ஷன் திட்டத்தில் அதன் தீவிர பங்கேற்பு, கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
என்.ஐ.டி.டி.டி.ஆர் சென்னை, இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னணி நிறுவனமாகும். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் அதீத கவனம் செலுத்துவதன் மூலம், இந்த நிறுவனம் 21- ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.