புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசியக் கல்விக்கழக (என்ஐஎஸ்சிபிஆர்) வளாகத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தளத்தை 2024, டிசம்பர் 13 அன்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித் துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி திறந்துவைத்தார். இது ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன்களை மேலும் மேம்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியையொட்டி தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற மரக்கன்று நடும் இயக்கமும் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த இயக்கம் .
சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், டாக்டர் கலைச்செல்வி, பிரமுகர்களை வரவேற்றார். என்ஐஎஸ்சிபிஆர் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இயக்குநர், 16 மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கியது, 50 மாணவர்களுக்கு அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கொள்கையில் பயிற்சி அளித்தது உள்ளிட்ட நிறுவனத்தின் சாதனைகளை எடுத்துரைத்தார். இந்தியாவில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் கொள்கையில் முனைவர் பட்டம் (பிஎச்டி) வழங்கும் ஒரே நிறுவனம் என்ஐஎஸ்சிபிஆர் ஆகும்.
விவேகானந்தர் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுடன் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி கலந்துரையாடினார். இந்திய இதழ்களுக்கு ஐஎஸ்எஸ்என் எண் ஒதுக்கப்பட்ட இந்தியாவின் நோடல் நிறுவனம் என்ஐஎஸ்சிபிஆர் என்பதை டாக்டர் கலைச்செல்வி சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த முயற்சி குறித்து அதிகமான மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான மாநில மொழி அடிப்படையிலான பத்திரிகைகளின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். எந்தவொரு முனைவர் பட்ட ஆய்வறிக்கையிலும் அறிமுக அத்தியாயம் மிகவும் முக்கியமானது என்றும், அதை மதிப்பாய்வு செய்து ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்திய பத்திரிகை அடிப்படையிலான தகவல்தொடர்புகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்
என்ஐஎஸ்சிபிஆர் சிறந்த அறிவியல் தொடர்பாளர்களை உருவாக்க வேண்டும் என்றும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பத்திரிகைகளில் அவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிட வேண்டும் என்றும் டாக்டர் கலைச்செல்வி வலியுறுத்தினார். மாணவர்கள் ஆவணப்படுத்தும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்; வரைகலை சுருக்கங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். குறுகிய வீடியோக்கள் மற்றும் ரீல்கள் மூலம் அறிவியல் தகவல்தொடர்புகளில் புதுமையைக் காண்பிக்கும் ஒரு தனித்துவமான தளத்தை உருவாக்கவும் அவர் முன்மொழிந்தார். நிகழ்வின் நிறைவில் சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் தலைமை விஞ்ஞானி டாக்டர் யோகேஷ் சுமன் நன்றி கூறினார்.