நம்பகமான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சேகரித்தல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றில் மாநிலங்களின் திறன்களையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்த ‘புள்ளியியல் வலுப்படுத்துதலுக்கான ஆதரவு நடைமுறை’ என்ற மத்திய அரசின் துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகம் மானிய உதவி வழங்குகிறது. இந்த துணைத் திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவிலான புள்ளிவிவரங்களைத் தொகுத்தல், ஒருங்கிணைந்த மாநில தரவுத்தளங்களை உருவாக்குதல், தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.
மாநில அளவில் முக்கிய குறியீடுகளைத் தொகுத்தல், பயிலரங்குகள் நடத்துதல், புள்ளியியல் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், புள்ளிவிவரங்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்கின்றன. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இதுவரை 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.346.66 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 322.00 கோடிக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்துள்ளன. இவற்றில், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய 14 மாநிலங்கள் நிதி விடுவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி முடித்துள்ளன.
மேலும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அறிவு பகிர்வு, பயிற்சி, பயிலரங்குகள் உள்ளிட்டவை மூலம் உதவிகளை வழங்கி மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் ஆதரவு அளிக்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.