அதிநவீன அடுத்த தலைமுறைக்கான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமும் ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் புத்தொழில் நிறுவனமான சிலிசியம் சர்க்யூட்ஸ் தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி “லியோ செயற்கைக்கோளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் வடிவமைப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்த தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்.
புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க ஏதுவாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் தயாரிப்புகள், வடிவமைப்பு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு இது உதவிடும். இத்திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் அகண்ட அலைவரிசை இணையதள சேவை, மொபைல் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகளுக்கான இடைவெளியைக் குறைப்பதில் இத்தகைய நடவடிக்கைகள் உதவிடும்.