தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின், 28.11.2024 நிலவரப்படி, நாட்டில் 25,385 மகளிர் நல கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் 1,44,396 பால் கூட்டுறவுச் சங்கங்களில் கிராமப்புற மகளிர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு:
(i) பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002, திருத்தச் சட்டம், 2023 ஆகியவற்றின்படி பெண்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கூட்டுறவுத் துறையில் பாலின சமத்துவ மேம்பாட்டிற்கு வழி வகுத்துள்ளது.
(ii) பொது வேளாண்மை சங்கத்திற்கான மாதிரி துணை விதிகள் கூட்டுறவு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் பெண் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்துக்கும் கூடுதலான பொதுக் கணக்கு மையங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் முடிவெடுக்கும் அதிகாரம் ஆகியவற்றை உறுதி செய்கிறது.
(iii) கூட்டுறவு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சட்டப்பூர்வ நிறுவனமான தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் மகளிர் கூட்டுறவு அமைப்புகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.