மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று 37 வது புலனாய்வு அலுவலக நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு அலுவலகத்தின் இயக்குநர், புலனாய்வு அலுவலகத்தின் முன்னாள் இயக்குநர்கள், மத்திய காவல் படைகள், மத்திய ஆயுத காவல் படைகளின் தலைமை இயக்குநர்கள், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் மீதான பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பு முகமைகள் தீர்க்கமான நடவடிக்கைகள் மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, வடகிழக்கு மாநிலங்கள், இடதுசாரி தீவிரவாதம், காஷ்மீர் விவகாரம் ஆகிய மூன்று நீண்டகால பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டது. இது அமைதி, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றுக்கு சவாலாக இருந்தது என்று அவர் எடுத்துரைத்தார். மத்திய அரசின் கடுமையான கொள்கைகள், முடிவுகள் காரணமாக, வரும் தலைமுறையினர் எவ்வித அச்சுறுத்தல்கள் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை என்றார். இந்த மூன்று பிராந்தியங்களிலும் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் சுமார் 86 சதவீதம் குறைந்துள்ளதாகவும் திரு ஷா குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில், உளவுத்துறை அமைப்பின் தாக்கத்தை சமூகம், இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என நான்கு பரிமாணங்களாகப் பிரித்துப் பார்க்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பரிமாணங்களுக்கு இடையே தடையற்ற தகவல் தொடர்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பான சமுதாயம் மட்டுமே பொருளாதார, சமூக வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க, புலனாய்வு அமைப்பு நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்த இலக்கை அடைய இளம் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எந்தவொரு பாதுகாப்பு அமைப்பின் வெற்றியும் அதன் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் விளக்கினார். தவறான தகவல்களை எதிர்கொள்ள ஒரு வலுவான சூழல் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வலியுறுத்தினார்.