ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உரிய நேரத்தில் நீதி வழங்கப்படாவிட்டால், அது நீதி கிடைக்காமல் இருப்பதற்கு சமம் என்று கூறினார். வழக்கை ஒத்திவைக்கும் கலாச்சாரத்தால் நலிவடைந்த பிரிவினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அடிக்கடி நீதிமன்றத்திற்கு வருவதற்கு அவர்களிடம் போதிய நிதியோ, ஆள் பலமோ கிடையாது என்று அவர் குறிப்பிட்டார். பொது மக்களின் நலன் கருதி வழக்கை ஒத்திவைக்கும் கலாச்சாரத்தை தவிர்ப்பதற்கான வழியைக் கண்டறிய அனைத்து தரப்பினரும் முன்னுரிமை அளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சாமானிய மக்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது என்று அவர் கூறினார். வழக்கறிஞர் அவர்களுக்காக என்ன வாதிடுகிறார் அல்லது நீதிபதி என்ன கருத்தை வழங்குகிறார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகள் தற்போது ஒடியா மற்றும் சந்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதையும், இந்த மொழிபெயர்க்கப்பட்ட தீர்ப்புகள் உச்ச நீதிமன்றம் மற்றும் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் இணைய தளங்களில் கிடைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இன்று பெண்கள் தலைமையிலான வளர்ச்சி வலியுறுத்தப்படுகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மற்ற துறைகளைப் போலவே நீதித்துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். தற்போது, ஒடிசா நீதித்துறை சேவையில் 48 சதவீத பெண் அதிகாரிகள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். வரும் நாட்களில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சாதாரண மக்கள் எவ்வாறு நீதித்துறையுடன் அச்சமின்றி தொடர்பு கொள்ள முடியும் என்பது ஒரு முக்கியமான விஷயம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். பெரும்பாலும் வக்கீல்கள், நீதிபதிகள் முன் மக்கள் பதற்றமடைகிறார்கள். அவர்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த நீதிமன்றங்களில் உணர்வுப்பூர்வமான சூழல் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.