மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), “கணினித் தகவல் கசிவு கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பு மற்றும் பகுப்பாய்வு தீர்வு ” க்கு சி.ஆர். ராவ் மேம்பட்ட கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சி-டாட் தலைமையில் “கணினித் தகவல் கசிவு கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பு மற்றும் பகுப்பாய்வு தீர்வு ” கூட்டு மேம்பாட்டுக்காக இந்திய ஸ்டார்ட்-அப்கள் / அமைப்புகள் / ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான சி-டாட் கூட்டு ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாட்டிலேயே இந்த வகையில் முதலாவதான சி.ஆர். ராவ் மேம்பட்ட கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் நிறுவனம் குறியாக்கவியல், தகவல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனம் 380-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது, பல தொழில்நுட்ப அறிக்கைகளைத் தயாரித்துள்ளது. கிரிப்டாலஜி துறையில் மென்பொருள் கருவிகளை உருவாக்கியுள்ளது.
சி-டாட் தொழில்நுட்ப இயக்குநர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா கலந்து கொண்ட நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முதன்மை ஆய்வாளர் திரு ஸ்ரீராமுடு மற்றும் சிஆர் ராவ் ஏஐஎம்எஸ்சிஎஸ் நிறுவனத்தின் நிதி அதிகாரி திரு பி பாண்டு ரெட்டி ஆகியோர்நிகழ்வில் கலந்து கொண்டனர்
பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டின் தகவல்தொடர்புக்கான குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் முக்கிய பங்கினை சி-டாட் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ் குமார் உபாத்யாய் அடிக்கோடிட்டுக் காட்டினார், “தற்சார்பு இந்தியா” க்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தற்சார்பு தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பின் நீண்டகால பார்வையை நனவாக்குவதற்கும், தொலைத் தொடர்பு பாதுகாப்புத் துறைகளில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.