காற்றுத் தர மேலாண்மை ஆணைக்குழுவின் தலைவர் தலைமையில் இன்று அந்த ஆணைக்குழுவின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (ஜிஆர்ஏபி) கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் செயல்திறனையும் இக்கூட்டம் மதிப்பாய்வு செய்தது. குறிப்பாக தில்லியில் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தில்லி தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகள், அதிகாரிகள், அமைப்புகள் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஜி.ஆர்.ஏ.பி.யின் நிலை -1, நிலை-2 ஆகிய நிலைகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய / தீவிரப்படுத்தப்பட வேண்டிய முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
குளிர் காலத்தின் காற்று மாசுபாட்டை திறம்பட சமாளிக்க முக்கிய பகுதிகளிலும் பிற முன்னுரிமை பகுதிகளிலும் உள்ள அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது. மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், காற்றின் தரத்தில் முன்னேற்றங்களை அடைவதற்கும் ஒரு கூட்டு அணுகுமுறை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.