தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் உள்ள சில்வாசாவில் ஜந்தா சௌக்கில் உள்ள சுவாமி விவேகானந்தா வித்யா மந்திரை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 13, 2024) திறந்து வைத்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ பகுதி மக்கள் தமக்கு அளித்த அன்பான வரவேற்பு, தமது நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார். அன்பான வரவேற்புக்காக யூனியன் பிரதேச மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஜந்தா சௌக் பள்ளியை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக குடியரசுத் தலைவர் கூறினார் . உயர் கல்வியை மேம்படுத்த யூனியன் பிரதேச நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார் . மாணவர்களுக்கு தரமான தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக அரசு பொறியியல் கல்லூரி 2018-ல் தொடங்கப்பட்டது. மேலும் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் 2022-ல் நிறுவப்பட்டது. இந்த முயற்சிகள் யூனியன் பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பகுதி வளமான வரலாற்று, கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இதன் காரணமாக தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை சிறந்த சுற்றுலா தலங்களாக உள்ளன . சுற்றுலா வசதிகளை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். சுற்றுலாவின் விரிவாக்கம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திப்பது தம்மை மிகவும் பெருந்தன்மை மற்றும் உணர்வு உடையவராகம் ஆக்குகிறது என அவர் குறிப்பிட்டார்.