सोमवार, दिसंबर 23 2024 | 04:04:52 AM
Breaking News
Home / अन्य समाचार / பீகார் மாநிலம் தர்பங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

பீகார் மாநிலம் தர்பங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Follow us on:

பாரத் மாதா கீ ஜெ!

பாரத் மாதா கீ ஜெ!

ஜனக மகாராஜா, அன்னை சீதாவின் புண்ணிய பூமியையும், மகாகவி வித்யாபதியின் பிறப்பிடத்தையும் நான் வணங்குகிறேன். இந்த வளமான, அற்புதமான பூமியில் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, மதிப்பிற்குரிய பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, பீகார் துணை முதலமைச்சர்கள் விஜய் குமார் சின்ஹா, திரு சாம்ராட் சவுத்ரி, தர்பங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் தாக்கூர் அவர்களே, மற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே, மிதிலாவின் எனதருமை சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

நண்பர்களே,

அண்டை மாநிலமான ஜார்கண்டில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் தொலைநோக்கு பார்வையை நனவாக்க ஜார்க்கண்ட் மக்கள் வாக்களித்து வருகின்றனர். ஜார்க்கண்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

அழகான குரலுக்குப் பெயர் பெற்ற மிதிலாவின் மகள் சாரதா சின்ஹா அவர்களுக்கும் நான் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். போஜ்புரி மற்றும் மைதிலி இசைக்கு சாரதா சின்ஹா ஜி செய்த இணையற்ற பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமது பாடல்கள் மூலம் சாத் பண்டிகையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை.

நண்பர்களே,

இன்று, பீகார் உட்பட ஒட்டுமொத்த தேசமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மைல்கற்களை எட்டியுள்ளது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் வசதிகள் இப்போது ஒரு யதார்த்தமாகி வருகின்றன. வளர்ந்த இந்தியாவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். இந்த மாற்றங்களைக் காண்பதற்கும், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் நமது தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள்.

நண்பர்களே,

நாட்டுக்கு சேவை செய்வதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசு எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது. சேவைக்கான இந்த உறுதிப்பாட்டுடன், ஒரே நிகழ்வில் ரூ. 12,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த திட்டங்கள் சாலை, ரயில் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை உள்ளடக்கியது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் கனவை நிறைவேற்றுவதில் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்பங்கா எய்ம்ஸ் கட்டுமானம் பீகாரின் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது மிதிலா, கோசி மற்றும் திர்ஹுத் பிராந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், மேற்கு வங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்கும். கூடுதலாக, நேபாளத்தைச் சேர்ந்த நோயாளிகள் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும். இந்த நிறுவனம் ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக தர்பங்கா, மிதிலா மற்றும் ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நமது நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகையில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர். அவர்கள் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவ சிகிச்சையின் நிதிச்சுமை அவர்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. நம்மில் அநேகர் ஏழ்மையான, சாதாரண பின்னணியிலிருந்து வருகிறோம். ஒரு குடும்ப அங்கத்தினருடைய நோய் முழு வீட்டிற்கும் எவ்வாறு மிகுந்த கஷ்டத்தைக் கொண்டுவரக்கூடும் என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்கிறோம். கடந்த காலத்தில், நிலைமை மோசமாக இருந்தது. மிகக் குறைவான மருத்துவமனைகள், மருத்துவர்களின் கடுமையான பற்றாக்குறை, விலையுயர்ந்த மருந்துகள் மற்றும் சரியான நோயறிதல் வசதிகள் இல்லாமை ஆகியவை இருந்தன. அதே நேரத்தில் முந்தைய அரசுகள் அர்த்தமுள்ள நடவடிக்கை இல்லாமல் வெறுமனே வாக்குறுதிகளையும் கோரிக்கைகளையும் வழங்கின. இங்கே பீகாரில், நிதிஷ் குமார் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த அரசுகள், ஏழைகளின் அவலநிலை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. நோய்களை மௌனமாக சகித்துக்கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. இத்தகைய சூழ்நிலையில் நம் நாடு எப்படி முன்னேற முடியும்? காலாவதியான மனநிலை மற்றும் பழைய அணுகுமுறை இரண்டையும் மாற்றுவது முக்கியம்.

நண்பர்களே,

நாடு முழுவதும் சுகாதாரப் பராமரிப்புக்கான விரிவான அணுகுமுறையை எங்கள் அரசு பின்பற்றி வருகிறது. முதலாவதாக, நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இரண்டாவதாக, துல்லியமான நோயறிதலுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். மூன்றாவதாக, இலவச மற்றும் மலிவான சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நான்காவதாக, சிறிய நகரங்களில் கூட உயர்தர மருத்துவ வசதிகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். கடைசியாக, எங்கள் ஐந்தாவது கவனம் மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும், சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும் ஆகும்.

சகோதர சகோதரிகளே,

எந்த நபரும் நோய்வாய்ப்படுவதை எந்த குடும்பமும் விரும்பவில்லை. நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஆயுர்வேதம் மற்றும் சத்தான உணவுகளின் நன்மைகள் குறித்து மக்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஃபிட் இந்தியா இயக்கம் உடற்தகுதியை ஊக்குவிப்பதற்காக நடந்து வருகிறது. மோசமான சுகாதாரம், அசுத்தமான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் பல பொதுவான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தூய்மை இந்தியா திட்டம், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்டுதல், குழாய் மூலம் தூய்மையான நீர் வழங்குதல் போன்ற முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிகள் தூய்மையான நகரங்களுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், நோய் பரவும் அபாயத்தையும் குறைக்கின்றன. தர்பங்காவில் கடந்த மூன்று, நான்கு நாட்களாக நமது தலைமைச் செயலாளர் தனிப்பட்ட முறையில் நகரத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டார் என்று நான் கேள்விப்பட்டேன். ஆதரவளித்த அவருக்கும், அனைத்து பீகார் அரசு ஊழியர்களுக்கும், தர்பங்கா மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 5 முதல் 10 நாட்களுக்கு இந்த முயற்சியை இன்னும் அதிக உற்சாகத்துடன் தொடருமாறு அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.

நண்பர்களே,

பெரும்பாலான நோய்கள், ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்டால், கடுமையானதாக மாறுவதைத் தடுக்கலாம். இருப்பினும், விலையுயர்ந்த மருத்துவ பரிசோதனைகள் பெரும்பாலும் மக்களை சரியான நேரத்தில் நோய்களைக் கண்டறிவதைத் தடுக்கின்றன. இதை எதிர்கொள்ள நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களை நாங்கள் அமைத்துள்ளோம். இந்த மையங்கள் புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளை அவற்றின் ஆரம்ப கட்டங்களில் கண்டறிய உதவுகின்றன.

நண்பர்களே,

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த திட்டம் இல்லாவிட்டால், இந்த நபர்களில் பெரும்பாலானோரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்முயற்சி பலரின் குறிப்பிடத்தக்க சுமையை குறைத்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இந்த திட்டம் வசதி செய்துள்ளது. ஆயுஷ்மான் திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 1.25 லட்சம் கோடியை சேமித்துள்ளன. அரசு வெறுமனே ரூ. 1.25 லட்சம் கோடி விநியோகத்தை அறிவித்திருந்தால், அது ஒரு மாதத்திற்கு தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம், அந்தத் தொகை சத்தமில்லாமல் நமது மக்களுக்குப் பயனளித்துள்ளது.

சகோதர சகோதரிகளே,

தேர்தலின் போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும் ஆயுஷ்மான் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று நான் உறுதியளித்தேன். அந்த வாக்குறுதியை நான் காப்பாற்றியுள்ளேன். பீகாரிலும், குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையை நாங்கள் தொடங்கியுள்ளோம். விரைவில், அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை கிடைக்கும். ஆயுஷ்மான் திட்டத்துடன், மக்கள் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன.

நண்பர்களே,

சிறந்த சுகாதாரப் பராமரிப்புக்கான எங்களது நான்காவது முயற்சி, சிறிய நகரங்களில் கூட உயர்தர மருத்துவ வசதிகளை வழங்குவதும், மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும் ஆகும். இதைக் கவனியுங்கள்: சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டுகளுக்கு, நாடு முழுவதிலும் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. அது தில்லியில் இருந்தது. கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. காங்கிரஸ் அரசு கூடுதலாக நான்கைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும் என்று அறிவித்த போதிலும் அவற்றை முழுமையாக செயல்பட வைக்க முடியவில்லை. எங்கள் அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, நாடு முழுவதும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியது. இன்று இந்தியா முழுவதும் சுமார் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இது சிகிச்சை வசதிகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளதுடன் அதிக எண்ணிக்கையிலான புதிய மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பீகாரைச் சேர்ந்த பல இளம் மருத்துவர்கள் எய்ம்ஸ் தர்பங்காவில் பட்டம் பெற்று சமூகத்திற்கு சேவை செய்வார்கள். நாங்கள் முக்கியமான ஒன்றையும் சாதித்துள்ளோம். முன்பு, ஒரு மருத்துவராக மாறுவதற்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம். ஆனால் ஆங்கிலத்தில் கற்க முடியாத நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அந்த கனவை எவ்வாறு அடைய முடியும்? ஒருவரின் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதை எங்கள் அரசு இப்போது சாத்தியமாக்கியுள்ளது. இந்த மகத்தான சீர்திருத்தம், இந்த மாற்றத்தை எப்போதும் எதிர்பார்த்து வந்த கர்பூரி தாக்கூருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலியாகும். அவரது கனவை நனவாக்கியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் 100,000 புதிய மருத்துவ இடங்களை அதிகரித்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மேலும் 75,000 இடங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், பீகார் இளைஞர்களுக்கு பயனளிக்கும் மற்றொரு மகத்தான முடிவை எங்கள் அரசு எடுத்துள்ளது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் மருத்துவம் படிக்கும் விருப்பம் அது. இந்த நடவடிக்கையால் ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் மருத்துவர்களாக மாற உதவும்.

நண்பர்களே,

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பெரிய முன்முயற்சியையும் எங்கள் அரசு தொடங்கியுள்ளது. முசாபர்பூரில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனை பீகாரில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த மருத்துவமனை ஒரே குடையின் கீழ் விரிவான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதுடன், நோயாளிகள் பராமரிப்புக்காக தில்லி அல்லது மும்பைக்கு பயணிக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கும். பீகாரில் விரைவில் அதிநவீன கண் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்கள் முன்பாக நான் காசியில் இருந்தபோது, காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் அவர்களின் ஆசியோடு ஒரு மகத்தான கண் மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. காசியில் உள்ள இந்த சிறந்த மருத்துவமனை குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட மாதிரியைப் பின்பற்றுகிறது. இந்த மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பான சேவைகளால் ஈர்க்கப்பட்டு, இதைப் போன்ற ஒரு கண் மருத்துவமனை பீகாரிலும் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும், முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டபடி, இத்திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய கண் மருத்துவமனை இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வளமாக இருக்கும்.

நண்பர்களே,

பீகாரில் நிதிஷ் குமார்  தலைமையில் உருவான ஆட்சி முன்மாதிரியானது. மோசமான ஆட்சியில் இருந்து பீகாரை விடுவிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசு பீகாரின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் உறுதிபூண்டுள்ளது. இந்த விரைவான முன்னேற்றம் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சிறு விவசாயிகள், உள்ளூர் தொழில்களுக்கான ஆதரவு மூலம் அடையக்கூடியது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதற்கான தெளிவான திட்டத்தைக் கொண்டுள்ளது. இன்று, விமான நிலையங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகள் அதிகம் உருவாக்கப்படுவதால் பீகாரின் அடையாளம் வலுப்படுத்தப்படுகிறது. தர்பங்கா இப்போது உதான் திட்டத்தின் கீழ் ஒரு விமான நிலையத்தைக் கொண்டுள்ளது. தில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. ராஞ்சிக்கு விமானங்கள் விரைவில் தொடங்கப்படும். ரூ. 5,500 கோடி மதிப்பிலான அமாஸ்-தர்பங்கா அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், ரூ. 3,400 கோடி மதிப்பிலான நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில், எரிவாயு வீடுகளுக்கு தண்ணீரைப் போல வசதியாக பாயும், அது மிகவும் மலிவானதாக இருக்கும். இந்த மகத்தான வளர்ச்சி முயற்சி பீகாரின் உள்கட்டமைப்பை உயர்த்துவதுடன் ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

நண்பர்களே,

இந்த பிராந்தியத்தின் விவசாயிகள், மக்கானா உற்பத்தியாளர்கள் மற்றும் மீன் விவசாயிகளின் நலனுக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பீகாரில் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இது மிதிலா பகுதி விவசாயிகளுக்கும் பயனளிக்கிறது. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம், உள்ளூர் மக்கானா உற்பத்தியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுகிறார்கள். மக்கானா உற்பத்தியாளர்களை ஆதரிப்பதற்காக, மக்கானா ஆராய்ச்சி மையத்திற்கு தேசிய நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கானா புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதேபோல், மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மட்டத்திலும் மீன் விவசாயிகளுக்கு நாங்கள் உதவுகிறோம். மீன் விவசாயிகள் இப்போது கிசான் கடன் அட்டைக்கு தகுதியுடையவர்கள். மேலும் உள்ளூர் நன்னீர் மீன்களுக்கு குறிப்பிடத்தக்க சந்தை உள்ளது. பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், இந்த உற்பத்தியாளர்களுக்கு கணிசமான ஆதரவை வழங்குகிறது. மீன் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இந்தியாவை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். தர்பங்காவின் மீன் விவசாயிகள் இதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.

நண்பர்களே,

கோசி மற்றும் மிதிலாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் பீகாரின் வெள்ளப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான விரிவான திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. நேபாளத்துடன் இணைந்து நீடித்த தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த பிரச்சினையைத் தீர்க்க எங்கள் அரசு ரூ. 11,000 கோடி மதிப்புள்ள திட்டத்தில் முதலீடு செய்கிறது.

நண்பர்களே,

பீகார், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் முக்கிய மையமாகும். அதைப் பாதுகாப்பது நமது கூட்டுக் கடமையாகும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாரம்பரிய பாதுகாப்புடன் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று, நாளந்தா பல்கலைக்கழகம் தமது பழைய பெருமையையும் முக்கியத்துவத்தையும் மீட்டெடுக்க முயற்சிக்கிறது.

நண்பர்களே,

பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில், நமது பல மொழிகள் நமது பாரம்பரியத்தின் பொக்கிஷமான பகுதியாகும். இம்மொழிகளில் பேசுவது மட்டுமின்றி, அவற்றைப் பாதுகாப்பதும் அவசியம். சமீபத்தில், புத்தரின் போதனைகளையும், பீகாரின் பாராம்பரியப் பெருமையையும் அழகாகப் படம்பிடிக்கும் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை நாங்கள் வழங்கியுள்ளோம். இந்த பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மைதிலி மொழியைச் சேர்த்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கூடுதலாக, மைதிலி ஜார்க்கண்டில் இரண்டாவது மாநில மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இங்கே தர்பங்காவில் உள்ள மிதிலா பிராந்தியத்தின் கலாச்சார செழுமை ஒவ்வொரு இடத்திலும் தெளிவாகத் தெரிகிறது. அன்னை சீதாவின் மதிப்புகள் மற்றும் நற்பண்புகள் இந்த நிலத்தை ஆசீர்வதிக்கின்றன. நமது தர்பங்கா உட்பட நாடு முழுவதும் உள்ள 10-க்கும் மேற்பட்ட நகரங்களை ராமாயண சுற்றுவட்டத்துடன் இணைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. இந்த முயற்சி இப்பகுதியில் சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்தும். மேலும், தர்பங்கா-சீதாமர்ஹி-அயோத்தி வழித்தடத்தில் அமிர்த பாரத் ரயில் சேவை மக்களுக்கு பெரும் பயனளித்துள்ளது.

நண்பர்களே,

இன்று நான் உங்களிடையே உரையாற்றும் போது, மகாராஜா காமேஷ்வர் சிங்கின் மகத்தான பங்களிப்பையும் நான் நினைவுபடுத்துகிறேன். சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பாரதத்தின் முன்னேற்றத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது. எனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் கூட அவரது முயற்சிகள் நன்கு அறியப்பட்டவை. அவை மிகவும் மதிக்கப்படுகின்றன. மகாராஜா காமேஷ்வர் சிங்கின் சமூகப் பணி தர்பங்காவுக்கு பெருமை சேர்ப்பதாகவும், நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது.

நண்பர்களே,

பீகார் மக்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில் மத்தியில் எங்களது அரசும், பீகாரில் நிதீஷ் குமார் அரசும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களில் இருந்து அதிகபட்ச பலன்களை பீகார் மக்கள் பெறுவதை உறுதி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை தர்பங்கா மற்றும் இதர வளர்ச்சித் திட்டங்களை நிறுவியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் –

பாரத் மாதா கீ ஜெ!

பாரத் மாதா கீ ஜெ!

பாரத் மாதா கீ ஜெ!

மிக்க நன்றி

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …