இந்தியாவின் எஃகு தொழிலின் கதை குறிப்பிடத்தக்க மாற்றத்தின் சான்றாகத் திகழ்வதுடன், நாட்டின் அகண்ட பொருளாதாரப் பயணத்தை நெருக்கமாகப் பிரதிபலிக்கிறது. ஒரு காலத்தில் உலக அளவில் மிதமான உற்பத்தியை மேற்கொண்ட இந்தத் துறை, 2018-ம் ஆண்டு ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, தற்போது உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளர் என்ற நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. நவீனமயமாக்கல், தன்னிறைவு, நிலைத்த தொழில் மயமாக்கலை நோக்கிய இந்தியாவின் அகண்ட பயணத்தை இது சுட்டிக்காட்டுகிறது. வளர்ச்சியடைந்த நாடு என்ற இந்தியாவின் தொலைநோக்கிற்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்புக்கு இத்தொழில்துறை முக்கியப் பங்காற்றும்.
2019 மற்றும் 2023-ம் ஆண்டுக்கு இடையே எஃகு தொழிலின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் எஃகு உற்பத்தி, சீனாவை விட அதிகரித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் எஃகு திறனில் 62 மில்லியன் டன் என்ற உலகளாவிய அதிகரிப்பை இந்தியா கண்டது. இது 6 சதவீத வளர்ச்சி விகிதமாகும்.
இந்த செயல்திறன் உலகச் சந்தையில் நாட்டின் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க வகை செய்தது. இந்தியா வெறுமனே எஃகு உற்பத்தியை மேற்கொள்ளவில்லை. அது இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து ஏற்றுமதியில் போட்டியை அதிகரிக்கும். செயல் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
தேசிய எஃகு கொள்கை 2017-ன் படி, 2030-31-ம் ஆண்டு வாக்கில் கச்சா எஃகு உற்பத்தித் திறனை 300 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஃகு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்ட வேண்டும் என்பதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. எஃகு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு மிக்கதாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கமாகும்.
2019-20-ம் ஆண்டில் 109.137 மில்லியன் டன்னாக இருந்த கச்சா எஃகு உற்பத்தி, 2023-24-ம் ஆண்டில் 144.299 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது, இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13.4 சதவீத வளர்ச்சியாகும். 2019-20-ம் ஆண்டில், 142.299 மில்லியன் டன்னாக இருந்த உள்நாட்டு எஃகு தொழில்துறையின் திறன் 2023-24-ல் 179.515 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
உற்பத்தியை நிறைவு செய்த எஃகு நுகர்வைப் பொறுத்தவரை, 2019-20-ல் 100.171 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2023-24-ல் 136.291 மில்லியன் டன்னாக அதிகரித்தது.
இந்த வளர்ச்சி, உத்திசார்ந்த கொள்கைகள், தொழில் தலைமையிலான முன்முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியை கணிக்க முடியும்.
எஃகு உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் முக்கிய முன் முயற்சியாக அறிவிக்கப்பட்டது. இது மூலதன முதலீடுகளை ஈர்ப்பதையும், இறக்குமதிகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ரூ. 29,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்புடன் சிறப்பு எஃகு உற்பத்தி திறனை 25 மில்லியன் டன்னாக இது உயர்த்தும். உலகளவில் எஃகு தொழிலை போட்டி நிறைந்ததாக மாற்ற 2024-ம் ஆண்டு பட்ஜெட்டில், மூலப் பொருளான ஃபெரோ நிக்கல் மீதான அடிப்படை சுங்க தீர்வையை அரசு குறைத்துள்ளது. மேலும் ஃபெரோ கழிவு எஃகுக்கு 2026 மார்ச் மாதம் வரை வரிவிலக்கை நீட்டித்துள்ளது. மற்றொரு முக்கிய முன்முயற்சியான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் எஃகுப் பொருட்கள் கொள்கை, அரசு கொள்முதலுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட எஃகை ஊக்குவிக்கிறது.
தற்போது இந்தியாவில் எஃகுத் தொழில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. பெருமளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் மேக் இன் இந்தியா, பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம் ஆகிய முன்முயற்சிகள் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்கின்றன. அரசு மற்றும் தனியார் துறையின் உத்திபூர்வ முதலீடுகள் உற்பத்தி திறனையும், போட்டியையும் ஊக்குவிக்கும் நிலையில் உள்ளன. இது 2017-ம் ஆண்டின் தேசிய எஃகு கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்ச உதவும். ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் கனவை நனவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சி, வேலை உருவாக்கம், தொழில் மேம்பாடு ஆகியவற்றிலும் எஃகுத் துறை முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.