தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், சென்னையில் இன்று ஜவுளித்துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் அலுவலர்களுடன் இத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் திரு டி ஆர் பி ராஜா மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் திருமதி ஆர். லலிதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த கைத்தறி, கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் பார்வையிட்டார். கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில், மத்திய அரசின் ஜவுளித்துறையின் திட்டங்களை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்துவதாக கூறினார்.
மேலும், இந்தியாவின் ஜவுளித்துறை தற்போது 176 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது என்றும், இது 2030-ம் ஆண்டு கிட்டத்தட்ட 350 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சந்தையாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, சேலைகள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களால் விழாக்காலங்களில் பெரிதும் விருப்பத்தேர்வுககளாக உள்ளன என்றார் அவர். ஓவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மக்கள்தொகை ஒரு ஆஸ்திரேலியா கண்டத்தின் அளவு அதிகரிப்பதாகவும், அதற்கேற்ப நமது உள்நாட்டு ஜவுளித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு செயல்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு புதிய ஸ்டைல் டிரெண்டாகி வருகிறது என்றும், இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வு:
பின்னர் அமைச்சர் கிரிராஜ் சிங், சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஷன்நெக்ஸ்ட் ஆராய்ச்சிக் கூடத்தையும், இதர செயல்பாடுகளையும் பார்வையிட்டு அந்நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், இந்நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் ஒன்று என்றும், இந்நிறுவனத்தின் மாணவர்கள் படிப்பை முடித்து செல்லும்போது குறைந்தது 1000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனுள்ளவர்களாக மாறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
விஷன்நெக்ஸ்ட் ஆராய்ச்சி மையம் இந்தியாவுக்கென தனித்தன்மையுடன் கூடிய டிரெண்டிங் ஆராய்ச்சிகளை செய்து முன்கூட்டியே வழங்குகிறது என்றார் அவர்.
தமிழ்நாடு ஜவுளித்துறையின் ஒரு முக்கியமான மையமாக திகழ்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். செயற்கை நூலிழைகளை விட இயற்கையாக கிடைக்கும் நூலிழைகள், ஆடை வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார். தற்போது இத்துறையின் பணியாளர்கள் எண்ணிக்கையான 4.6 கோடி, வரும் 2030ம் ஆண்டு 6 கோடியாக உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், நமது உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதே முன்னுரிமை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.