நாக்பூரின் காம்ப்தீ பகுதியில் ட்ராகன் பேலஸ் ஆலயத்தின் 25-வது ஆண்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. காம்ப்தீ பகுதியில் உள்ள பௌத்த மடாலய வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு பெருமளவில் பங்களிப்பாற்றிய ஜப்பானின் ஒகாவா சமுதாயத்தைச் சேர்ந்த 50 புத்த துறவிகள் இதில் கலந்து கொண்டனர். நவம்பர் 15-ம் தேதி காலை ஜப்பானிய புத்த துறவிகளின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்தக் கொண்டாட்டத்தில், துறவிகள் மேளதாளம் முழங்க மந்திரங்களை முழங்கியபடி வந்தனர். பின்னர், அங்கு வெண். நிச்சியூ (கான்சென்) தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்தக் கோவிலின் உரிமையாளரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான திருமதி சுலேகாதாய் கும்பரே-வுக்கு உதவியாக திருமதி நோரிட்டோ ஒகாவா செயல்பட்டார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த ட்ராகன் பேலஸ் ஆலயம், இப்பகுதி மக்கள் மற்றும் ஜப்பானிய நண்பர்கள் புத்த தம்மத்தின் மீது கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளச் சின்னமாக திகழ்கிறது என்றார். இந்தப் பிணைப்பு இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள புத்த அமைப்பகளுக்கு இடையேயான எதிர்கால ஒத்துழைப்புக்கு அடிப்படையாகத் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ பேசுகையில், மகாராஷ்டிராவில் புத்தரின் போதனைகளைப் பரப்புவதில் அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பு மிகப் பெரியது என்றார். சமூக அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய அவரது ஆழமான புரிதல், இந்தியாவின் 2-வது பெரிய தம்மமாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார்.