புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏ.என்.ஆர்.எஃப்) கீழ் அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடியை தொழில்துறை புத்தாக்கங்களை வளர்ப்பதற்கும், நாட்டில் ஆராய்ச்சி அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இளைஞர்கள் பரிசோதனை மற்றும் புதிய யோசனைகளை உருவாக்கும் மனநிலைக்கு தயார்படுத்தப்பட வேண்டும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) 97-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாட்டில் முக்கிய உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலை மேம்படுத்த உதவும் அரசின் முன்முயற்சி, தொழில்துறை தலைவர்களிடமிருந்து ஆர்வத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், நிதிப் பலன் கிடைக்கும் வகையிலும் நேரத்தை திறமையாக பயன்படுத்தும் வகையிலும் செயல்முறைகளை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு பங்கேற்பாளர்களை வலியுறுத்தினார். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஏற்றுமதியைத் தூண்டுவதற்கும் தொழில்துறையுடன் புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் தொழில்துறை-கல்வி-அரசு கூட்டாண்மையின் ஒரு பகுதியாக தனியார் துறை நிறுவனங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
பிரதமர் மோடி அரசின் கீழ் டிஜிட்டல் இந்தியா, பிரதமரின் சூரிய சக்தி வீடு திட்டம் – சௌபாக்யா, பிரதமரின் ஏழைகள் நல இலவச உணவுத் திட்டம் (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்), ஆயுஷ்மான் பாரத் போன்ற முன்முயற்சிகள் இந்தியாவின் விரைவான மாற்றத்திற்கு பங்களித்தன என்றும் திரு கோயல் எடுத்துரைத்தார்.
நாட்டின் எதிர்காலத்தை தொடர்ந்து வடிவமைத்து வரும் பிரதமரின் தூய்மை இந்தியா இயக்கத்தைப் பாராட்டிய அமைச்சர், தூய்மைக்கான விழிப்புணர்வு பிரதமரால் உருவான புரட்சி என்று எடுத்துரைத்தார். மேலும், நாடு முழுவதும் உள்ள தொழில் பூங்காக்களில் தூய்மையை மேம்படுத்துவதற்காக “தூய்மைத் தொழில் பூங்காக்களில் சிறந்து விளங்குதல்” என்ற விருதுக்கு ஏற்பாடு செய்ததற்காக ஃபிக்கி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், தூய்மை என்பது பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். தொழிற்சாலைகள் மற்றும் பெரு வணிக நிறுவனங்களின் அலுவலகங்கள் தூய்மைக்காக ஃபிக்கி மேற்கொண்டுள்ள நாடு தழுவிய இயக்கம் மிகச் சிறந்த பெரு நிறுவன சமூகப் பொறுப்புடைமையின் (சிஎஸ்ஆர்) முன்முயற்சியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு அலுவலர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கழிப்பறைகள் கட்டுவதை ஏற்றுக்கொள்வது குழந்தைகளின் எதிர்காலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியாவின் வளர்ச்சிக் கதையை மேம்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்த வழிவகுக்கும் இணக்க சுமைகளைக் குறைக்கவும், வணிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை குற்றமற்றதாக்கவும் தொழில்துறை தலைவர்கள் மேலும் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அரசுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்றும் திரு கோயல் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு தனது பணியை சிறப்பாக செய்ய உதவும் பின்னூட்ட அமைப்பாக ஃபிக்கி இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
உலகளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது குறித்து பேசிய அமைச்சர், இந்த நாடு உலகின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றும், அதன் வர்த்தகம் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் ஒரு பகுதியாக மாறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். உலகளாவிய தெற்கில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா பார்க்கப்படுகிறது என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.
இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியாக மட்டுமல்லாமல், தரமான பொருட்களை வழங்கும் நாடாகவும் இருக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை நோக்கிய நமது பயணத்தை வரையறுக்கும் சக்திவாய்ந்த கலவையாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.