பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.
இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தியா மற்றும் கயானா இடையேயான ஆழமான வரலாற்று உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், அவரது பயணம் இருதரப்பு உறவுகளுக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம் மற்றும் மருந்து, பாரம்பரிய மருத்துவம், உணவு பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, திறன் வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட இந்தியா மற்றும் கயானா இடையேயான பன்முக உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவான விவாதங்களை நடத்தினர். எரிசக்தித் துறையில் தற்போது நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து குறிப்பிட்ட இரு தலைவர்களும், ஹைட்ரோகார்பன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டனர். வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு இந்தியா-கயானா கூட்டாண்மையின் முக்கிய தூணாக உள்ளது. கயானாவின் வளர்ச்சி விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க அதிக ஒத்துழைப்பு தேவை என்று இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். இந்தியா ஏற்பாடு செய்திருந்த தெற்கின் குரல் மாநாடுகளில் பங்கேற்றதற்காக அதிபர் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்த இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்மட்டச் சந்திப்புகளை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தப் பயணத்தின் போது பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.