இந்திய தர குழுமத்தின் உறுப்பு வாரியமான பரிசோதனை மற்றும் தர பரிசோதனை ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL), மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் முன்னிலையில் இந்திய வீட்டுவசதி மேம்பாட்டு சங்க கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. புதுதில்லியில் 2024 நவம்பர் 25-ந் தேதி நடைபெற்ற வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
கட்டுமான திட்டங்களுக்கான தற்காலிக தள சோதனை ஆய்வகங்களின் தரநிலை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த ஒப்பந்தம் கட்டுமானத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அதன் தரநிலையை துல்லியமாக பரிசோதிக்கப்படுவதை உறுதி செய்ய வகை செய்கிறது.
கட்டுமான திட்டங்கள், குறிப்பாக 50,000 சதுர அடிக்கும் கூடுதலான கட்டுமானத் திட்டங்களில், பயன்படுத்தப்படும் கான்கிரீட் க்யூப்ஸ் போன்ற பொருட்களின் தரத்தை சரிபார்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வகங்கள் உயர்தரமான கட்டுமானப் பொருட்களின் பயன்பாட்டை உறுதி செய்வதற்கான திட்டமாக தேசிய அங்கீகார வாரியம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய அங்கீகார வாரியத்தின் என்.என்.வெங்கடேஸ்வரன், இந்திய வீட்டுவசதி மேம்பாட்டு சங்க கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் ஜி.படேல், இந்திய தர குழுமத்தின் தலைவர் ஜாக்சே ஷா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தற்காலிக தள சோதனை ஆய்வகங்களில் கட்டுமானப் பொருட்களின் தர உத்தரவாதத்தை மேம்படுத்துவதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்க வகை செய்கிறது. இதன் மூலம் கட்டுமானத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.