ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநில மாநாட்டு மையத்தில் 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறவுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
2024 நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில், பயங்கரவாத எதிர்ப்பு, இடதுசாரி தீவிரவாதம், கடலோர பாதுகாப்பு, புதிய குற்றவியல் சட்டங்கள், போதைப்பொருள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பின் முக்கிய கூறுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறும். சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கமும் இந்த மாநாட்டின் போது வழங்கப்படும்.
இந்த மாநாடு நாட்டின் மூத்த காவல்துறை வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகளுக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் காவல்துறை எதிர்கொள்ளும் பல்வேறு செயல்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சுதந்திரமாக விவாதிக்கவும், கலந்துரையாடவுமான ஒரு தளத்தை வழங்கும். உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தவிர, குற்றக் கட்டுப்பாடு மற்றும் சட்டம் ஒழுங்கு மேலாண்மை தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கான தொழில்முறை நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை பகிர்ந்து கொள்வது ஆகியவை இந்த விவாதங்களில் அடங்கும்.
காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் எப்போதும் சிறப்பான ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார்.பிரதமர் அனைத்து விவாதங்களையும் கவனமாகக் கேட்பது மட்டுமல்லாமல், வெளிப்படையான மற்றும் முறைசாரா விவாதங்களை சிறப்பாக மேற்கொள்வதற்கான சூழலையும் உருவாக்கித் தருகிறார்.இது புதிய யோசனைகள் வெளிப்பட ஏதுவாகிறது .இந்த ஆண்டு, மாநாட்டில் சில தனித்துவமான அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. யோகா அமர்வு, வணிக அமர்வு, பிரேக்-அவுட் அமர்வுகள் மற்றும் கருப்பொருள் டைனிங் அமர்வுகள் தொடங்கி முழு நாளும் திறம்படப் பயன்படுத்தப்பட உள்ளது. நாட்டைப் பாதிக்கும் முக்கியமான காவல்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்கள் குறித்த தங்கள் முன்னோக்குகள் மற்றும் ஆலோசனைகளை பிரதமரிடம் முன்வைக்க மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது.
2014-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் நடைபெறும் வருடாந்திர காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாடுகளை நடத்துவதற்கு பிரதமர் ஊக்கமளித்துள்ளார். கவுகாத்தி (அசாம்), ரான் ஆஃப் கட்ச் (குஜராத்), ஐதராபாத் (தெலங்கானா), தேகன்பூர் (குவாலியர், மத்தியப் பிரதேசம்), ஒற்றுமையின் சிலை (கெவாடியா, குஜராத்), புனே (மகாராஷ்டிரா), லக்னோ (உத்தரப்பிரதேசம்), புதுதில்லி (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் இந்த மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து, 59-வது மாநாடு இந்தாண்டு புவனேஸ்வரில் (ஒடிசா) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை இணை அமைச்சர்கள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.