நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேசிய நீர் மின் கழகமான என்எச்பிசி, 2024 நவம்பர் 28 அன்று ஃபரிதாபாத்தில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (ஜிஜிஜிஐ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஹெச்.பி.சி.யின்நிர்வாக இயக்குனர் திரு வி.ஆர்.ஸ்ரீவத்ச்வா ஜிஜிஜிஐ. யின் இந்திய தலைவர் சௌமிய பிரசாத் கர்நாயக், ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பசுமை ஹைட்ரஜன், தூய்மையான எரிசக்தி தீர்வுகள் போன்றவற்றை ஊக்குவிப்பதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சிகள் குறைந்த கார்பன் வெளியேற்றத்தை நோக்கிய நடவடிக்கையாகும். பருவநிலை சவால்களை எதிர்கொள்ள என்எச்பிசி மேற்கொள்ளும் வலுவான ஆராய்ச்சி, மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
இந்த ஒத்துழைப்பின் கீழ், அதிநவீன தொழில்நுட்பங்களை ஆராய்வது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை விவசாய நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பது, பசுமை திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றில், என்எச்பிசி-யும் ஜிஜிஜிஐ-யும் இணைந்து செயல்படும். இந்த முன்முயற்சி இந்தியாவின் பரந்த பருவநிலை இலக்குகளை அடைய உதவும்.
பயனுள்ள பசுமை எரிசக்தி தீர்வுகளுக்கு வழி வகுக்கும் ஒரு உத்திசார் ஒத்துழைப்பின் தொடக்கமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. என்எச்பிசி, ஜிஜிஜிஐ ஆகியவை அடுத்த தலைமுறைகளுக்கு நிலையான, எரிசக்தி பாதுகாப்புடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன .
என்எச்பிசி லிமிடெட், இந்தியாவின் முதன்மையான நீர்மின் நிறுவனம் ஆகும். இது இந்திய அரசின் நவரத்னா நிறுவனமாகும்.
உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் என்பது பசுமை எரிசக்தி முயற்சிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.