பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான முயற்சிகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்காது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே வளாகங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மைல்கல் முயற்சியாக, ரயில்வே பாதுகாப்புப் படை, பெண்கள் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, புதுப்பிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP -எஸ்ஓபி) 25.10.2024 அன்று புதுதில்லியில் உள்ள ரயில் பவனில் வெளியிட்டது.
இதனை வெளியிட்டுத் தொடங்கி வைத்த மத்திய மகளிர் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக், மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறார்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ரயில்வேயின் முன்முயற்சிகளைப் பாராட்டினார். ஒவ்வொரு நாளும் 2.3 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்றும் இதில் 30 சதவீதம் பெண்கள் எனவும் அவர் தெரிவித்தார். அவர்களில் பலர் தனியாக பயணம் செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கடத்தல்காரர்களால் கடத்தப்படும் அபாயத்தில் உள்ள சிறார்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் (RPF), மனிதக் கடத்தல் எதிர்ப்பு பிரிவுகளை (AHTUs) வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மகளிர்- குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடத்தலில் இருந்து 57,564 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. அவர்களில் பெண்கள் 18,172 பேர். மேலும், இந்த குழந்தைகளில் 80 சதவீதம் பேர் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதை படை உறுதி செய்துள்ளது. ‘ஆபரேஷன் நன்ஹே ஃபரிஷ்டே’ திட்டத்தின் கீழ், ரயில்வே கட்டமைப்பு முழுவதும் குழந்தைகளைப் பாதுகாக்க ஆர்பிஎஃப் தொடர்ச்சியான கவனம் செலுத்துகிறது.
ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவ் கூறுகையில், ரயில்வே வளாகத்தில் குழந்தைகளைப் பாதுகாத்து, சிறார் நீதி சட்டத்தின்படி பணியாற்றுவதாகக் கூறினார். ரயில்வே வாரியத்தின் தலைவர் திரு சதீஷ் குமார் உட்பட இரு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.