இகாஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து முன்னேற இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக உத்தராகண்ட் மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தேவபூமியின் இகாஸ் திருவிழா பாரம்பரியம் மேலும் செழிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“எனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட உத்தராகண்ட் மாநில மக்கள் அனைவருக்கும் இகாஸ் பண்டிகை நல்வாழ்த்துகள்! இன்று தில்லியில், உத்தராகண்ட் மாநிலத்தின் மக்களவை உறுப்பினர் அனில் பலுனியின் இல்லத்தில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளித்திட வாழ்த்துகிறேன் @anil_baluni”
“வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து முன்னேற நாம் உறுதிபூண்டுள்ளோம். ஏறக்குறைய அழிந்து வரும் நாட்டுப்புற கலாச்சாரத்துடன் தொடர்புடைய இகாஸ் திருவிழா, உத்தராகண்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையின் மையமாக மீண்டும் மாறுகிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”
“உத்தராகண்டில் உள்ள எனது சகோதர சகோதரிகள் இகாஸ் பாரம்பரியத்தை உயிர்ப்பித்த விதம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நாடு முழுவதும் இந்தப் புனிதப் பெருவிழா மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுவதே இதற்கு நேரடிச் சான்றாகும். தேவபூமியின் இந்த பாரம்பரியம் மேலும் செழிக்கும் என்று நான் நம்புகிறேன்.”