ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் உள்ள நாகமங்களாவில் அமைந்துள்ள மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-வது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை அறிஞர்கள் பங்கேற்றனர்.
இந்த தினம் குறித்து மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக அனுப்பிய செய்தியில், இயற்கையுடன் இணைந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தனித்துவமான மருத்துவ முறையாக இயற்கை மருத்துவம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் யோகா மற்றும் இயற்கை உணவு மையங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்த அவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுக்கான மத்திய சட்டத்தை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.
ஆராய்ச்சி மற்றும் ஆதாரங்களை உருவாக்குவதில் அரசின் நோக்கம் குறித்து தெரிவித்த திரு ஜாதவ், “பல்வேறு மாநிலங்களில் உயர்மட்ட ஆராய்ச்சிகளை நடத்த 100 முதல் 200 படுக்கைகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் நிறுவனங்களை உருவாக்கப் போகிறோம்” என்று கூறியிருந்தார். கர்நாடக மாநிலம் நாகமங்களா, ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் ஆகிய பகுதிகளில் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதை அவர் குறிப்பிட்டார். 2024 ஆயுர்வேத தினத்தன்று, சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் ஒடிசாவின் கோர்தா ஆகிய இடங்களில் 100 படுக்கைகள் கொண்ட புதிய மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதை சுட்டிக்காட்டியுள்ளார். அசாம், ஆந்திரா மற்றும் கேரளாவில் இதே போன்ற நிறுவனங்களுக்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் திரு பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.