பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகம் நவம்பர் 20 அன்று இந்திய கடல் உணவு நிகழ்வின் இரண்டாவது பதிப்பை நடத்தியது. இது புது தில்லியின் வேளாண் – பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேனா (APEDA), கொச்சியில் உள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான எம்பிஇடிஏ (MPEDA) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் இந்தியாவின் மிகச்சிறந்த சமையல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்வு வணிகப் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகள், கடல் உணவு இறக்குமதியாளர்கள், அரசு வர்த்தக நிறுவனங்கள், தூதரக பிரதிநிதிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர்.
பெல்ஜியம், லக்சம்பர்க், ஐரோப்பிய யூனியனுக்கான இந்திய தூதர் திரு சௌரப் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கலாச்சார, வர்த்தக உறவுகளை வளர்ப்பதில் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால், இந்தியாவின் துடிப்பான வர்த்தக சூழலையும் ஐரோப்பிய யூனியனுடன் அதன் வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் பற்றி எடுத்துரைத்தார்.
இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி, 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பையும், 17.81 லட்சம் மெட்ரிக் டன் அளவையும் எட்டியுள்ளது. வெனாமி இறால்களின் ஏற்றுமதி நான்கு மடங்காக அதிகரித்து, உயர்தர கடல் உணவு தயாரிப்பாக உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 500 நிறுவனங்களுடன், இந்தியாவின் கடல் உணவு பதப்படுத்தும் திறன் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.