ஒடிசா மாநிலம் பூரியில் இன்று (டிசம்பர் 4, 2024) நடைபெற்ற கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தருணம் இது என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், முப்பரிமாண அச்சு போன்ற தொழில்நுட்பங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவுகின்றன. நாம் தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்குத் தேவையான நடைமுறைகளை வகுக்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால், கடந்த காலத்தை அறியாமல், நாம் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது. இயற்பியல், வேதியியல், வானியல், ஜோதிடம், மருத்துவம், கணிதம் மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளில் நாடு வளமான பாரம்பரியங்களைக் கொண்டுள்ளது. ஆர்யபட்டா, பிரம்மகுப்தர், வராஹமிகீர், பாஸ்கராச்சாரியார் போன்ற விஞ்ஞானிகள் அறிவியல் துறையை மேம்படுத்தியுள்ளனர். அதேபோல், மருத்துவ அறிவியல் துறையில் சரக் மற்றும் சுஷ்ருதரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை முறையில் பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகள் சம அளவிலான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்று குடியரசுத்தலைவர் கூறினார். கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் மாணவர்கள் மருத்துவர்களாக பணியாற்றுவதைத் தவிர, ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படாத அம்சங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆராய்ச்சிப் பணிகள் நாட்டின் பண்டைய மருத்துவ முறையின் நம்பகத்தன்மையை பறைச்சாற்றும் என்று அவர் கூறினார்.
பழங்குடியின மக்கள் மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவக் குணங்களை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் இந்த பாரம்பரிய அறிவு படிப்படியாக மறைந்து வருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். இந்த சிகிச்சை முறையின் அறிவியல் அடிப்படையை இந்த கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்வதன் மூலம் அந்த பாரம்பரிய மருத்துவ முறையை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.