ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 7-வது பதிப்பு ஒரே நேரத்தில் 2024 டிசம்பர் 11-ம் தேதி நாடு முழுவதும் 51 மையங்களில் தொடங்குகிறது. மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்பது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மாணவர் குழுக்கள், 17 கருப்பொருள்களில் ஏதேனும் ஒன்றில் அவர்களது கண்டுபிடிப்பு அல்லது யோசனைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் அமையும்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியில், 54 அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறைகள் 250-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இதில் 86000-க்கும் அதிகமான அணிகள்கல்விநிலைய அளவில் பங்கேற்று இருந்தன. இதில் இருந்து சுமார் 49,000 மாணவர் குழுக்கள் தேசிய அளவிலான சுற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அமைச்சகங்கள் / அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவர்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரிடையே வெளிப்படையான கலந்துரையாடலுக்கான ஒரு தளமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
சுகாதாரம், விநியோகச் சங்கிலித் தொடர், தளவாடங்கள், நவீன தொழில்நுட்பங்கள், பாரம்பரியம், கலாச்சாரம், நிலைத்தன்மை, கல்வி, திறன் மேம்பாடு, நீர், விவசாயம், உணவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பேரிடர் மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும்.