இந்திய இணைய ஆளுகை மன்றம் (IIGF-ஐஐஜிஎஃப்) – 2024 என்ற மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (2024 டிசம்பர் 9, 10) புது தில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் நடைபெறும். மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவின் தேசிய இணைய பரிமாற்ற அமைப்பு (NIXI) ஆகியவற்றின் ஆதரவுடன் இது நடத்தப்படுகிறது. இந்த முயற்சி இணைய நிர்வாகத்தின் முக்கியமான அம்சங்களை ஆராய்தல், அர்த்தமுள்ள உரையாடலை வளர்த்தல், உலகளாவிய டிஜிட்டல் சூழலில் இந்தியாவின் நிலையை முன்னிலைப்படுத்முதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் முன்னிலை வகிக்கவுள்ளார்.
2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் ஐஐஜிஎஃப் வெற்றிகரமாக நேரடியாகவும் காணொலி மூலமாகவும் நடத்தப்பட்ட பிறகு, நான்காவது பதிப்பு தற்போது “இந்தியாவிற்கான இணைய ஆளுகையைப் புதுமைப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட உள்ளது. இந்த மன்றம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பது, இணையதள சூழலில் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும். அதே நேரத்தில் பாதுகாப்பான, உள்ளடக்கிய, நெறிமுறை ரீதியாக நிர்வகிக்கப்படும் இணையத்தின் தேவையையும் இது வலியுறுத்தும்.
பங்கேற்பாளர்கள் நிகழ்வுக்கு பதிவு செய்வதற்கும் நிகழ்ச்சி நிரலை அறிந்து கொள்வதற்குமான இணையதளம்: https://indiaigf.in/agenda-2/